இன்று (25) வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
மாநகர சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனையின் பேரிலும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழும் இந்த விசேட சுகாதாரத் திட்டங்கள் தற்பொழுது மாநகர சபை எல்லைக்குள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநகர சபை எல்லைக்குள் தற்பொழுது எதிர்கொள்ளும் பிரதான சவால்களில் ஒன்றாகப் பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகள் காணப்படுகின்றன. இக்காணிகளின் உரிமையாளர்கள் அவற்றை முறையாகப் பராமரிக்காததன் காரணமாக, அயலவர்கள் மற்றும் பாதசாரிகள் இக்காணிகளுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளையும் ஏனைய குப்பைகளையும் கொட்டுவதனை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கும் பொதுச் சுகாதார சீர்கேட்டிற்கும் வழிவகுக்கின்றன.
துப்புரவு செய்யப்படாமல் அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாகத் தூய்மைப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
மாநகர சபையின் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறும் மற்றும் அலட்சியம் காட்டும் காணி உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவும் அடையாளம் காணப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் எவரும் முன்வராத பட்சத்திலோ அல்லது காணிகளைப் பராமரிக்க இணங்காத பட்சத்திலோ, அவை "மாநகர சபைக்குச் சொந்தமானது" என்ற அறிவித்தல் பலகைகள் அக்காணிகளில் நடப்பட்டு, அவை மாநகர சபையின் நேரடிப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் இவ்வேலைத்திட்டத்திற்குத் தத்தமது காணிகளைத் தூய்மையாகப் பேணி, அனைத்துக் குடிமக்களும் மாநகர சபைக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.


.jpg)










