“சலே விடுதலை செய்யப்படாவிட்டால் தீயிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன் என நான் கூறவில்லை” – தம்மரத்ன தேரர்


 
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய தமிழ்ச் செல்வனின் இருப்பிடத்தை பாதுகாப்புப் படையினருக்கு துல்லியமாக வழங்கியவர் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே. ஆனால் சலே விடுதலை செய்யப்படாவிட்டால் நான் தீயிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

எமது மல்வத்து மகா விகாரை தரப்பின் மகாநாயக்க தேரரிடம் கூட இது தொடர்பில் நான் தெரிவித்தேன். நான் அப்படியொரு கருத்தை கூறியிருக்கின்றேனா என்று கேட்டேன். நான் எங்கும் அவ்வாறான கருத்தை கூறவில்லை. நான் கூறியதாக எவரிடமாவது ஒலிப்பதிவோ அல்லது காணொளிப் பதிவோ இருந்தால் அதை வெளியிடட்டும். சமூக ஊடகங்கள் ஊடாக பல்வேறு பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இல்லாதவற்றை இருப்பது போல் சித்தரிக்கின்றனர். பொசோன் பௌர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு வாரமும் புதிய புதிய தலைப்புகளை உருவாக்கி சமூகத்தில் பரப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.

சுரேஷ் சலே இந்த நாட்டுக்கு மிகப்பெரிய சேவையாற்றிய புலனாய்வு அதிகாரி. அந்தக் காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது சாதாரண அமைப்பல்ல. அவர்களிடம் வான்வழி திறன் இருந்தது. தரைவழி திறன் இருந்தது. கடல்வழி திறன் இருந்தது.

நீர்மூழ்கிக் கப்பல்கள் இருந்தன. பணம் இருந்தது. வங்கிகள் இருந்தன. நீதிமன்றங்கள் இருந்தன. பொலிஸ் அமைப்பு இருந்தது. இந்த நாட்டுக்குள் தனி அரசாங்கம் ஒன்றைப் போன்று அவர்கள் செயற்பட்டனர். அந்தச் சூழ்நிலையில் புலனாய்வுப் பிரிவினர் செய்த பணியை நாம் மறந்துவிட முடியாது. நாட்டில் ஏதேனும் சம்பவம் நடைபெறுமானால் அதனை முன்கூட்டியே கண்டறிந்து பாதுகாப்புப் பிரிவுகளுக்கு தகவல் வழங்குவதே அவர்களின் பொறுப்பு.

சுரேஷ் சலே உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகள்தான் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களாக இருந்தவர்களின் இருப்பிடங்கள் தொடர்பான தகவல்களை வழங்கினர். தமிழ்ச் செல்வன் இருந்த துல்லியமான இடம் பற்றிய தகவல்களும் வழங்கப்பட்டன. அந்த தகவல்களின் அடிப்படையில்தான் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனவே அவர் இந்த நாட்டுக்கு சேவையாற்றியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதேவேளை அவர் அல்லது வேறு யாரேனும் தவறு செய்திருந்தால் அதற்காக சட்டம் செயற்பட வேண்டும். ஆனால் காட்டு மிராண்டித்தனமாக அல்லது மனிதாபிமானமற்ற வகையில் யாருக்கும் தண்டனை வழங்கக் கூடாது. இந்த நாட்டில் மேன்மையான நீதித்துறை இருக்கின்றது.

அந்த நீதித்துறை ஊடாகவே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். நாட்டில் எந்த ஆட்சியாளர் இருந்தாலும் எமது நிலைப்பாடு ஒன்றுதான். ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும், கோட்டாபய ராஜபக்ஷவாக இருந்தாலும், மகிந்த ராஜபக்ஷவாக இருந்தாலும் நல்லது செய்தால் நல்லது என்போம். தவறு செய்தால் தவறு என்போம்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காகவும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் பலர் பங்களித்துள்ளனர். அந்தப் பங்களிப்புகளை அரசியல் காரணங்களுக்காக மறந்துவிட முடியாது. நான் தீயிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறவில்லை.

அவ்வாறான எண்ணமோ தேவையோ எனக்கில்லை. ஆனால் பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஏற்கனவே சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.