வாக்களிப்பின் போது விரலில் மை பூசும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய


தேர்தல் காலத்தில் வாக்காளர்களின் விரலில் அழியாத மை பூசும் பாரம்பரிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும், நவீன தொழில்நுட்ப முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வாக்காளர்களை உறுதிப்படுத்துவது குறித்தும் பாராளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் புதன்கிழமை (24) ஊடகம் ஒன்றுக்கு விசேட கருத்தொன்றை வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வாக்காளர்களின் விரலில் அழியாத மை பூசும் நடைமுறையானது நீண்டகாலமாக நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பாரம்பரியமாகும். இது தொடர்பாக 1965, 1970 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் தேர்தல்களை நடத்திய முன்னாள் தேர்தல் ஆணையாளர் டயஸ் அபேசிங்க அன்று ஒரு முக்கிய முன்மொழிவைச் செய்திருந்தார். ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் தற்போதைய தேர்தல் கட்டமைப்பில், இந்த மை பூசும் முறை அவசியமா என்பது குறித்து மீண்டும் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மை பூசும் முறையானது ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குகளை அளிப்பதைத் தடுப்பதற்கே ஆரம்பத்தில் கொண்டு வரப்பட்டது. கடந்த 1956 ஆம் ஆண்டு வரை தேர்தல்கள் பல நாட்களாக நடத்தப்பட்டமையால், ஒரு இடத்தில் வாக்களித்துவிட்டு மற்றொரு தொகுதிக்குச் சென்று வாக்களிப்பதைத் தடுக்கவும், வாக்காளரை அடையாளம் காணவும் வேறு முறைகள் இருக்கவில்லை. ஆனால், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வாக்களிப்பதற்கு நிழற்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், வாக்காளர்களை அடையாளம் காண்பது தற்போது மிகவும் எளிதாகியுள்ளது. இதனால், இந்த மை பூசும் நடைமுறை இப்போது தேவையில்லை என்ற எண்ணம் பாராளுமன்றத்துக்கும் அரசியல் ஆர்வலர்களுக்கும் ஏற்படுவதற்குப் பலத்த வாய்ப்புகள் உள்ளன.

இந்த நடைமுறைக்கு பெருமளவிலான மக்கள் பணம் செலவிடப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு கடந்த தேர்தல்களில் ஒரு தீர்வு காணப்பட்டிருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில், வெளிநாடுகளில் இருந்து மையை இறக்குமதி செய்யாமல் உள்நாட்டு உற்பத்தியின் மூலமே விரலில் மை பூசப்பட்டது. இதன் மூலம் செலவினங்களைக் குறைத்துக் கொள்ள முடிந்தது. மற்றுமொரு விடயம் என்னவென்றால், வாக்காளர் பட்டியலில் பெயரைக் கூறி அடையாளமிடும் அதிகாரியிடமே இந்த மை பூசும் பொறுப்பையும் ஒப்படைத்தால், இதற்கென தனியாக ஒரு அதிகாரியை வாக்குச்சாவடிகளில் நியமிப்பதையும் தவிர்த்து, தேர்தலுக்கான செலவுகளை மேலும் குறைக்கலாம்.

ஒருவேளை இந்த விரலில் மை பூசும் முறையை நீக்குவதாக இருந்தால், வாக்குச்சாவடிகளில் அடையாள அட்டைகளைப் பரிசோதிக்கும் நடைமுறை தற்போதைய நிலையை விடவும் மிகவும் விழிப்பாகவும் முறையானதாகவும் மாற்றப்பட வேண்டும். தற்போது பலரின் அடையாள அட்டைகளில் உள்ள நிழற்படங்கள் தெளிவற்றதாகக் காணப்படுகின்றன. எனவே, இதனை அவசரகதியில் செய்யாமல், நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்துடன்கூடிய டிஜிட்டல் முறையிலான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும். அந்த டிஜிட்டல் தரவுகளின் பிரதியொன்றைத் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் வழங்கி, வாக்குச்சாவடிகளில் கணினி மூலம் பரிசோதிக்க முடியுமாக இருந்தால் அதுவொரு சிறந்த நவீன முறையாக அமையும்.

எமது நாட்டு மக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குகளை அளிக்க மாட்டார்கள் என்றும், அரசியல்வாதிகள் அதற்கு வாக்காளர்களைத் தூண்ட மாட்டார்கள் என்றும் நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையை எமது மக்கள் மீது ஏற்படுத்தி, அடையாள அட்டை முறையையும் பலப்படுத்தினால் இந்த மை பூசும் முறையை எம்மால் எளிதாக நீக்க முடியும். தற்காலத்தில் தொழில்நுட்பம் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. எமது பெயரின் முதலெழுத்துக்களையோ அல்லது அடையாள அட்டை இலக்கத்தையோ கணினியில் உள்ளிட்டால் எமது முழுமையான விபரங்களும் தோன்றிவிடுகின்றன. இதனால், இந்த மை பூசும் முறையை நேரடியாக நீக்குவது தேர்தல் நிர்வாக ரீதியாக எளிதாக அமையும்.

ஆனால், இந்த முறையை நீக்குவதாக இருந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குகளை அளிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் முடக்கப்பட வேண்டும். வாக்குச்சாவடியில் அடையாள அட்டையைத் தந்தவுடன் அதனைப் பெற்றுக்கொண்டு எவ்வித சோதனையுமின்றி வாக்குச்சீட்டை வழங்காமல், வாக்காளரைச் சரியாகப் பரிசோதித்து, விபரங்களைக் கேட்டு, அவர் உண்மையான வாக்காளர் தானா என்பதை உறுதி செய்த பின்னரே வாக்குச்சீட்டை வழங்க வேண்டும். மை பூசும் முறையை நீக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் பொறுப்பு சட்டங்களை இயற்றும் பாராளுமன்றத்திடமே உள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் தேசிய தேர்தல்களின் போதாவது இந்த விரலில் மை பூசும் நடைமுறையைத் தவிர்ப்பது குறித்து பாராளுமன்றம் முறையான சட்டத்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்றார்.