
சாரதி பயிற்சிப் பாடசாலைகளில் பயிற்சிகளை வழங்குபவர்களுக்கு முறையான பயிற்சி அனுமதிப்பத்திரம் இருப்பது கட்டாயமாகும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இத்தகைய உத்தியோகபூர்வ அனுமதிப்பத்திரம் இன்றி சாரதி பயிற்சி அளிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர,
பல சாரதி பயிற்சிப் பாடசாலைகள் நிறுவனத்திற்கான அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருந்தாலும், நடைமுறையில் தகுந்த சான்றிதழ்கள் இல்லாத நபர்களைக் கொண்டே பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இனிவரும் காலங்களில் சாரதி பயிற்சிகளை வழங்கும் ஒவ்வொரு போதகரும் தனிப்பட்ட ரீதியில் சாரதி பயிற்சி அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முறையற்ற பயிற்சிகளைப் பெற்று அனுமதிப்பத்திரம் பெறும் இளைஞர்களே வீதி விபத்துக்களில் அதிகமாகச் சிக்குகின்றனர்.
இத்தகைய இளம் சாரதிகள் பெரும்பாலும் வேகத்தைக் கட்டுப்படுத்தத் தவறுவதுடன், வீதிச் சமிக்ஞைகள் அல்லது விதிகளையும் பின்பற்றுவதில்லை. இதுவே விபத்துக்களுக்கு வழிவகுக்கின்றன.
அனுமதிப்பத்திரம் வழங்கும் செயல்முறை குறித்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் தற்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சான்றளிக்கப்பட்ட தகுதியானவர்கள் மாத்திரமே புதிய சாரதிகளுக்குப் பயிற்சியளிக்க அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன என்றார்.



.jpg)








