
தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு கூட்டு முயற்சியும், பகிரப்பட்ட அர்ப்பணிப்பும் அவசியமெனவும் அறிவுஇ திறமை மற்றும் ஆற்றல்மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் உயர்கல்வியின் முன்னேற்றமும் தொடர்ச்சியான வளர்ச்சியும் மிக முக்கியமான பொறுப்புகளாக இருப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (27) இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனத்தின் 48 ஆவது வருடாந்த அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு பிரதமர் மேலும் தெரிவித்ததாவது,
பொறியியல் வல்லுநர்கள் தேசிய அபிவிருத்திக்கு ஆற்றும் பங்களிப்பு இன்றியமையாதது, இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனம் முன்னெடுக்கும் திட்டங்களும் முயற்சிகளும் அதன் உறுப்பினர்கள் தமது தொழில்சார் பயணத்தில் முன்னேற உறுதுணையாக அமைவதோடு, நாட்டின் முன்னேற்றத்திற்கும் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கவும் தொடர்ந்து வலுச்சேர்க்கவும் காரணமாக அமைகிறது.
வேகமாக மாறிவரும் உலகப் பொருளாதாரத்தில், திறன்கள் மற்றும் ஆற்றல்கள் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுடன் ஒப்பிடப்படும் சூழலில்,சில பொறியியல் தகைமைகளுக்குக் குறைவான அங்கீகாரம் கிடைப்பது பல திறமையான நிபுணர்களின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தியுள்ளது.
இச்சவால்களை எதிர்கொள்ளுதல் தனிப்பட்ட பயிற்சியாளர்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமன்றி, இலங்கையின் பொறியியல் திறனை வலுப்படுத்துவதற்கும் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் இன்றியமையாததாக அமையும்.
உயர்கல்வியின் தொடர்ச்சியான மேம்பாடு ஒரு தேசிய முன்னுரிமையாகும்.தனிநபர்கள் தங்கள் அறிவை விரிவுபடுத்தவும் திறன்களை வலுப்படுத்தவும், நாட்டின் எதிர்காலத்திற்குப் பயனுள்ள பங்களிப்பை வழங்கவும் அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் கல்வி முறையொன்றைக் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது
தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு கூட்டு முயற்சியும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது. இந்த இலக்குகளை அடைவதற்கு அரசாங்கம், கல்வி நிறுவனங்கள்,தொழில்சார் அமைப்புகள், கைத்தொழில் துறை மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கிடையில் தொடர்ச்சியான உரையாடலும் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது என்றார்.












.png)