சுரேஸ் சலே தனது கடவுச்சொல்லை சுயாதீன விசாரணைக் குழுவுக்கு ஒப்படைக்கவேண்டும்


நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே சுரேஸ் சலே தனது மடிக்கணினி மற்றும் தொலைபேசியின் கடவுச்சொல்லை சுயாதீன விசாரணை குழுவுக்கு ஒப்படைக்கவேண்டும். அதனை தவிர்த்து பிறிதொரு தரப்புக்கு வழங்கக் கூடாது. விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல இரகசிய தகவல்கள் சுரேஸ் சலேவிடம் காணப்படுகிறது. அவற்றை வெளிப்படுத்தக் கூடாது. பாதுகாக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் உண்மை வெளிவர வேண்டும். விசாரணைகள் அரசியல்மயப்படுத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். எமது அரசாங்கத்தில் விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுக்கள், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் சர்வதேச விசாரணை பிரிவுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நோக்கத்துக்கமைய இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டது. எவ்விடத்திலும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே பற்றி குறிப்பிடப்படவில்லை.

அரசியல் பழிவாங்கலையும், உண்மையை மூடிமறைப்பதற்காகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஸ் சலே கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். விடுதலை புலிகள் அமைப்பை இல்லாதொழிப்பதற்கு சுரேஸ் சலே அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். நாட்டின் தேசிய வளமாக கருதப்பட வேண்டிய சுரேஸ் சலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மிக மோசமாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

சுரேஸ் சலேவுக்கு இழைக்கப்படும் சித்திரவதை மற்றும் அநீதிக்கு எதிராகவே நாங்கள் குரல் கொடுத்தோம். விசாரணைகளுக்கு எதிராகவோ அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் நாங்கள் செயற்படவில்லை. உண்மைகள் வெளிவர வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஸ் சலே தொடர்பில் பாராளுமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால 'சுரேஸ் சலே அவரது மடிக்கணினி மற்றும் தொலைபேசியின் கடவுச்சொல்லை வழங்க மறுத்துள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே சுரேஸ் சலே தனது மடிக்கணினி மற்றும் தொலைபேசியின் கடவுச்சொல்லை சுயாதீன விசாரணை குழுவுக்கு ஒப்படைக்க வேண்டும். அதனை தவிர்த்து பிறிதொரு தரப்புக்கு வழங்க கூடாது. விடுதலை புலிகள் அமைப்பு உட்பட பல இரகசிய தகவல்கள் சுரேஸ் சலேவிடம் காணப்படுகிறது. அவற்றை வெளிப்படுத்தக் கூடாது. பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.