ஞானசார தேரருக்கு முறையான பொது மன்னிப்பை வழங்க வேண்டும் - ஜனாதிபதியிடம் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கோரிக்கை


கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டபூர்வமான முறையில் உரிய பொது மன்னிப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டபூர்வமான முறையில் உரிய பொது மன்னிப்பினை வழங்க நடவடிக்கை எடுங்கள்.

மகா சங்கத்தினராகிய நாம் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்காக ஒரே இடத்தில் ஒன்றிணைய வேண்டும். தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தை அழிப்பதற்கான எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

அரசியலமைப்பில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அதிகாரம் குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான வழிமுறைகள் அமையப் பெற்றுள்ளன. ஆனால் கடந்த காலங்களில் பதவியில் இருந்த ஜனாதிபதிகள் இந்த சட்ட விதிகளையும் நடைமுறைகளையும் சரியாகப் பின்பற்றி பொது மன்னிப்பு வழங்கவில்லை.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துமிந்த சில்வாக்குப் பொது மன்னிப்பு வழங்கிய போது, இந்த சட்ட விதிகளை முறையாகப் பரிசீலித்தாரா அல்லது அதற்குத் தேவையான உரிய ஆவணங்களை உரிய இடங்களுக்கு அனுப்பி வைத்த பின்னரா அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய பொது மன்னிப்புக்கும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் இப்போது புரிகின்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது அதிகாரங்களையும் சட்டத்தையும் சரியாகப் பயன்படுத்தி, தவறு நடந்த இடங்களை ஆராய்ந்து, அத்துமீறி பொது மன்னிப்புப் பெற்றவர்களின் மன்னிப்பை ரத்து செய்து சட்டத்தை நிலைநாட்டி வருகின்றார். அதிகாரம் கிடைத்தவுடன் சிலர் அதனைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

பொது மன்னிப்பு வழங்கும் போது அதற்குப் பொறுப்பான கீழ் மட்ட நிறுவனங்களின் பரிந்துரைகளைப் பெற்று, உரிய ஆவணங்களை மேலதிக பரிசீலனைக்குக் கொண்டு வந்தே அதில் கையொப்பமிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அதிகாரம் கிடைத்தவுடன் சிலர் மதிமயங்கி கண்டபடி கையொப்பமிடுகின்றனர்.

தற்போது கலகொடஅத்தே ஞானசார தேரருக்கும் இந்த சட்டப் பிரச்சினையே ஏற்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட்டு கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு முறையான ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

அரசியலமைப்பைச் சரியாகப் பின்பற்றினால் எவராலும் எவ்விதப் பிரச்சினையும் இன்றி பணியாற்ற முடியும். அதனை மீறும் போதுதான் ஊழல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளும் உருவாகின்றன. அதிகாரம் கிடைத்தவுடன் அரசியலமைப்பை மறந்து, தங்களின் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் பிரச்சினைகளை உருவாக்கி நாட்டை அழித்துப் பாழாக்குகின்றனர் என்றார்.