தேசிய சுற்றாடல் சட்டத்திருத்தம் தொடர்பில் சம்மாந்துறையில் விழிப்புணர்வு நிகழ்வு


( மின்மினி மின்ஹா + நூருல் ஹுதா உமர் )


தேசிய சுற்றாடல் சட்டத்திருத்த மசோதாவின் மூன்றாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில், அதனைப் பற்றிய விழிப்புணர்வை உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடையே மேம்படுத்தும் நோக்கில் விசேட நிகழ்வு ஒன்று இன்று (23) சம்மாந்துறை பிரதேச சபையில் நடைபெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பல உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் சுற்றாடல் விடயங்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்

காலை 9.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில், தேசிய சுற்றாடல் சட்டத்திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான புதிய சட்ட ஏற்பாடுகள் மற்றும் அவற்றின் நடைமுறைப்படுத்தல் தொடர்பான வழிகாட்டுதல்கள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பு, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை அம்பாறை மாவட்ட அலுவலக உதவி பணிப்பாளர் பி.எம்.டபிள்யூ.என். பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் எம்.ஐ.எம். இஸ்ஹாக் மற்றும் கே. ஹுரைசிவா உள்ளிட்ட அதிகாரிகள் வளவாளர்களாக கலந்து கொண்டு விளக்கவுரைகளை நிகழ்த்தினர்.

தேசிய சுற்றாடல் சட்டத்திருத்தம் தொடர்பான அறிவை உள்ளூராட்சி நிர்வாக மட்டத்தில் வலுப்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பயனுள்ள வகையில் முன்னெடுப்பதற்கும் இந்நிகழ்வு முக்கிய பங்காற்றியதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.