
தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான காதலன், அவரது மனைவி மற்றும் ஒரு குழந்தை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (23) கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், சாவகச்சேரி நோக்கி பஸ் மூலம் பயணித்துக் கொண்டிருந்த போதே, இன்று புதன்கிழமை (24) அதிகாலை யாழ்ப்பாண பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் போது பிரதான சந்தேக நபர் அடையாளத்தை மறைக்க முகக்கவசம் அணிந்திருந்ததோடு, அவரது மனைவி ஒரு முஸ்லிம் பெண் போன்று பர்தா அணிந்து வேடமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின் படி, இவர்கள் கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய கடலோரப் பகுதிகளில் தலைமறைவாக இருந்ததோடு, அங்கிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்பியோட முயற்சித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையின் போது, தான் வவுனியாவிலிருந்து குருநாகலுக்குச் சென்று அங்குள்ள தனது மற்றைய இரு பிள்ளைகளையும் பார்த்துவிட்டு பொலிஸாரிடம் சரணடையவிருந்ததாகக் கூறியுள்ளார்.
எனினும் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் நேரடி மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஜூன் 17ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அவர், அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய 34 வயதுடைய ஷம்யா தர்ஷனி என்ற பெண் உடற்பயிற்சி நிபுணர் என அடையாளம் காணப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலனான, பேராதனை - கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் ஒருவரே இப்பெண்ணைக் கொலை செய்துவிட்டு சடலத்தைக் காரில் கைவிட்டு தப்பியோடியிருந்தார்.
நுவரெலியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த தனது சகோதரி சில நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை எனவும், அது குறித்து சோதிக்க உதவுமாறும் அவரது சகோதரர் ஜூன் 17 அன்று நுவரெலியா பொலிஸில் புகார் செய்துள்ளார். பொலிஸார் அங்கு சென்று சோதித்த போது அந்த வீடு பூட்டப்பட்டுக் கிடந்துள்ளது.
எனினும், அங்கிருந்த சிசிரிவி கேமரா காட்சிகளை சோதித்த போது, ஜூன் 16 இரவு 9.50 மணியளவில் சந்தேக நபரான காதலன் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளதோடு,அங்கு தங்கியிருந்த 40 நிமிடங்கள் வீட்டிற்குள் ஏதோ விபரீதம் நடந்துள்ளது.
அத்தோடு, இரவு 10.30 மணியளவில் சுயநினைவற்ற நிலையில் இருந்த அந்தப் பெண்ணை சந்தேக நபர் தூக்கிக்கொண்டு வந்து காரில் ஏற்றிச் சென்றுள்ளமை சிசிரிவி கேமெரா மூலம் கண்டறிப்பட்டது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.



.jpg)








