புதிதாகப் பிறக்கும் அமெரிக்கக் குழந்தைகளுக்கு 1,000 டொலர் : 'Trump Accounts' திட்டத்தை தொடங்கிய டிரம்ப்


அமெரிக்காவில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'Trump Accounts' திட்டத்தின் கீழ், 500,000-க்கும் அதிகமான குழந்தைகளின் கணக்குகளில் முதல் கட்டமாக தலா 1,000 அமெரிக்க டொலர் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்து நியூயோர்க் பங்குச் சந்தை (NYSE) மற்றும் நாஸ்டாக் (Nasdaq) நிர்வாகிகளுடன் இணைந்து தொடக்க மணி ஒலியை அடித்த பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

NYSE மற்றும் Nasdaq போன்ற போட்டி நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது, அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் நாட்டின் எதிர்காலத்திற்காக இணைந்து செயல்படுகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டாகும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

2025 முதல் 2028 வரை பிறக்கும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற குழந்தைகளுக்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் பிறந்தவுடன் அரசாங்கம் தலா 1,000 டொலர் முதலீடு செய்யும். அந்தத் தொகை நீண்டகால வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட குறைந்த செலவுடைய Index Fund-இல் முதலீடு செய்யப்படும்.

கணக்கு வைத்திருப்பவர்கள் 18 வயதை எட்டிய பின்னர், அந்த நிதியைப் பயன்படுத்தவோ அல்லது தொடர்ந்து முதலீடு செய்யவோ முடியும். பணத்தைப் பெறும் போது கிடைக்கும் இலாபத்திற்கு வரி விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே முதலீட்டு பழக்கத்தையும் நிதி அறிவையும் உருவாக்கும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எனினும், கூடுதல் தொகைகளைச் சேமிக்க இயலாத குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு இதன் முழுப் பயன் கிடைக்காது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையில், Visa, Dell, Comcast மற்றும் Micron உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. குறிப்பாக, Micron நிறுவனம் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 'Trump Accounts' திட்டத்திற்காக ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.

திட்ட அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட டெக்சாஸ் மாநில குடியரசுக் கட்சி செனட்டர் டெட் குரூஸ், "ஒவ்வொரு அமெரிக்கக் குழந்தையும் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குதாரராக மாறும் வாய்ப்பை இந்தத் திட்டம் உருவாக்குகிறது" எனக் குறிப்பிட்டார்.