
இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த முயற்சிக்கப்பட்ட 120 பந்தயப் புறாக்களை க்யூ பிரிவு (Q Branch) பொலிஸார் கார் ஒன்றுடன் பறிமுதல் செய்துள்ளனர்.
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் மற்றும் பாம்பன் பாலம் பகுதியில் க்யூ பிரிவு பொலிஸார் நேற்று (06) நள்ளிரவு முதல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற கார் ஒன்று பாம்பன் சாலைப் பாலத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. காரை சோதனையிட்டபோது, ஆறு இரும்புக் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 120 பந்தயப் புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து, காரையும் புறாக்களையும் பறிமுதல் செய்த பொலிஸார், மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த நவாப் செரிப் (22) மற்றும் மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த குமரேசன் (39) ஆகிய இருவரை கைது செய்து மேலதிக விசாரணைக்காக ராமேஸ்வரம் சுங்கத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
தொடர்ந்து, பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அங்கு நின்றிருந்த நாட்டுப்படகு ஒன்று பொலிஸாரைக் கண்டதும் கடல் வழியாக தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படகைத் தேடும் பணிகள் மரைன் பொலிஸாரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், இந்தப் பந்தயப் புறாக்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கடல் வழியாக இலங்கைக்கு பந்தயப் புறாக்களை கடத்த முயற்சி செய்து பிடிபட்ட முதல் சம்பவம் இதுவாகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






.jpg)


.jpg)


.jpg)
