கல்முனையில் மண்ணெண்ணெய் ஊற்றி பேருந்து செலுத்திய மூவருக்கு ரூபா. 360,000 அபராதம் !!


(பாறுக் ஷிஹான்)

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமாக பேருந்துகளை இயக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, தலா ரூ.120,000 வீதம் மொத்தமாக ரூ.360,000 அபராதம் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (06) தீர்ப்பளித்துள்ளது.

அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வாகன சோதனை நடவடிக்கையின் போது குறித்த மூன்று பேருந்துகளும் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, தலைமைப் பொலிஸ் பரிசோதகர் (CI) விஜேரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது, டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமாக பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களுக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், தலா ரூ.120,000 வீதம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தகவலை கல்முனை பொலிஸார் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமாக பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை உடனடியாக கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொறுப்பதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.