'A Team – Next Wave' புதிய அரசியல் தளத்தை அறிமுகப்படுத்திய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் !


எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, அனுராத ஜயரத்ன, டி.வி. சாணக மற்றும் சாணக மதுகொட ஆகியோர் இணைந்து "A Team – Next Wave" என்ற புதிய அரசியல் தளத்தை இன்று (07) அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் உள்ள எதிர்க்கட்சிக் குரல்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் பெரும்பான்மை காரணமாக பாராளுமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காத அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் தனிநபர்களின் குரலுக்கு இந்தத் தளம் இடமளிக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத அரசியல் அமைப்புகளுடனும் இணைந்து, மக்களின் பிரச்சினைகளை தேசிய மட்டத்தில் முன்வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளை ஒரே மேடையில் இணைத்து, பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி, வரிச்சுமை, விவசாயிகள், மீனவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய அனுபவமிக்க அரசியல் அணியே தற்போது நாட்டிற்கு தேவைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இறுதியில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, இலங்கையின் அடுத்த தேசிய அரசியல் அணியாக உருவெடுக்கும் வலுவான கூட்டணியை கட்டியெழுப்புவதே இந்த முயற்சியின் நீண்டகால இலக்காகும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.