
அக்குரேகொட இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகவும், இன்டர்போல் (Interpol) சிவப்பு அறிவிப்பு (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர், மாலைத்தீவிலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் தெரிவித்ததாவது, எத்துல்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இந்த சந்தேகநபர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் குழுவினரால் மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் தானியங்கி உயிரியல் அடையாள (Biometric E-Gate) அமைப்பின் மூலம் அவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் திகதி, தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில், சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உயிரிழந்தனர்.
இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தை இயக்கியவர் இந்த சந்தேகநபரே என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபருக்கு முன்னரும் பல குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், இரட்டைக் கொலை நடைபெற்ற காலத்தில் அவர் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
2025ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் திகதி, சட்டவிரோதமாக T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் மல்வத்துஹிரிப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தால் கடுமையான பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதேபோன்று, 2025ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தால் மீண்டும் கடுமையான பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்குரேகொட இரட்டைக் கொலைக்குப் பின்னால் இயங்கியதாக சந்தேகிக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் இந்த சந்தேகநபருக்கு உள்ள தொடர்புகள் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






.jpg)






