இராணுவ வீரர்களின் தியாகத்தை அவமதிக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச !



இராணுவ வீரர்கள் பெற்றுள்ள பதக்கங்களை "ஒரு உலோகத் துண்டு" எனக் குறிப்பிடுவது, போர்வீரர்களின் தியாகத்தையும் சாதனைகளையும் அவமதிப்பதாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாத்தறை, கொட்டப்பொல பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஆயுதப்படை உறுப்பினர்கள் பெற்றுள்ள பதக்கங்கள் அவர்களின் வீரம், தியாகம் மற்றும் நாட்டிற்கான சேவையை பிரதிபலிப்பவை என்பதால் அவை உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றார்.

தமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு பெருமையுடன் காட்டும் பதக்கத்தை வெறும் "உலோகத் துண்டு" எனக் கூறுவது வெட்கக்கேடான விடயம் என்றும், இத்தகைய கருத்துக்கள் போர்வீரர்கள் செய்த தியாகங்களை புறக்கணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அரசாங்கம் போர்வீரர்களின் கௌரவத்தையும் மரியாதையையும் குறைத்து மதிப்பிட முயற்சிக்கிறதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

இதனுடன், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளையும் விமர்சித்த நாமல் ராஜபக்ச, விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், முந்தைய அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களின் முழுமையான பயன்களை தற்போதைய அரசாங்கம் பயன்படுத்தத் தவறியுள்ளதாகவும், எதிர்க்கட்சிக்கு ஆதரவாக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.