உலகத் தரத்திலான வைத்தியர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய


 நாட்டு மக்களுக்கு உயர்ந்த தரத்திலான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய இலக்கின் ஒரு முக்கிய மைல்கல்லாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மருத்துவபீட வளாகத்தைக் குறிப்பிடலாம் என, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அத்தோடு, மருத்துவக் கல்வி முறையின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமாக, மாற்றம் பெற்று வரும் சமூகத் தேவைகளையும் உலகளாவிய சுகாதாரப் போக்குகளையும் பூர்த்தி செய்யக்கூடிய, அறிவையும் ஒழுக்கநெறிப் பண்புகளையும் கொண்ட வைத்தியர்களை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட, புதிய பீட வளாகத்தை மாணவர் பயன்பாட்டிற்காகக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் தற்போது ஏறத்தாழ 750 மாணவர்கள் கற்று வரும் அதேவேளை, வருடாந்தம் சுமார் 160 மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக இப்பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.

இப்புதிய மருத்துவபீட வளாக நிர்மாணத் திட்டத்திற்காக இலங்கை அரசாங்கம் சுமார் ரூ. 2,876 மில்லியன் நிதியைச் செலவிட்டுள்ளதுடன், சவூதி அரேபிய அரசு சுமார் ரூ. 15 பில்லியன் நிதியுதவியை வழங்கியிருக்கின்றது.

இப்பீட வளாகம், ஒரே தடவையில் 500 மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கக்கூடிய விடுதி மற்றும் 1,060 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் அமரக்கூடிய கேட்போர்கூடம் மற்றும் நிர்வாகக் கட்டடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது.

250 ஆசனங்களைக் கொண்ட இரண்டு விரிவுரைக்கூடங்களையும், 200 மாணவர்கள் அமரக்கூடிய ஒரு விரிவுரைக்கூடத்தினையும், சுமார் 160 மாணவர்கள் அமரக்கூடிய மூன்று விரிவுரைக்கூடங்களுமாக மொத்தம் ஆறு விரிவுரைக்கூடங்கள் இவ்வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

அத்துடன், இம்மருத்துவபீட நிர்மாணத் திட்டத்திற்கு இணையாக, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையை மையப்படுத்தி, முழுமையான ஆய்வகங்கள் மற்றும் இதர வசதிகளைக் கொண்ட ஒன்பது மாடிகளைக் கொண்ட பேராசிரியர்கள் பிரிவு ஒன்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

மருத்துவக் கல்வியின் தரத்தின் மீதே ஒரு சுகாதாரக் கட்டமைப்பின் வலிமையும் அதன் தாக்குப் பிடிக்கும் தன்மையும் தங்கியுள்ளது. விஞ்ஞான அறிவு, மருத்துவ நம்பிக்கை, நெறிமுறை நேர்மை மற்றும் பொதுச் சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு புதிய தலைமுறை மருத்துவ நிபுணர்களை உருவாக்க இப்பீடம் பங்களிக்கும் என நான் நம்புகிறேன்.

இந்த பீட வளாகத்தை 20 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு அளவில் அபிவிருத்தி செய்வதற்கான வழியமைத்து, 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாராளமாக நிதியுதவியாக வழங்கிய சவூதி அபிவிருத்தி நிதியத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முதலீடானது வருங்கால சந்ததியினருக்குப் பயனளிக்கும், இலங்கையின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட ஒரு நிரந்தர பங்களிப்பாகும்.

நிர்வாகக் கட்டிடம் மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை அரசாங்கம் சுமார் 1,096 மில்லியன் ரூபாவை முதலீடு செய்ததன் ஊடாக இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிந்தது. இதற்கு மேலதிகமாக, அத்தியாவசிய உபகரணங்களுக்காக 70 மில்லியன் ரூபாவும், கல்வி மற்றும் கற்றல் வளங்களைப் பலப்படுத்துவதற்காக திட்டத்தின் மூலம் மேலும் 194 மில்லியன் ரூபாவும் பங்களிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் என்ற வகையில் இலங்கையின் சுகாதாரச் சேவையை பலப்படுத்தவும், உயர்தர சுகாதாரச் சேவைகளை அனைவருக்கும் வழங்கவும் முயற்சிக்கும் இக்காலகட்டத்தில், இப்பீடத்திற்கும் ஒரு பாரிய பொறுப்பு இருக்கின்றது. நமது நாட்டிற்குத் தேவையான திறமையான சுகாதார நிபுணர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்குவதில் இப்பீடம் முன்னிற்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.

சப்ரகமுவ மாகாணத்திற்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டிற்கும் சேவையாற்றும் வகையில், மருத்துவக் கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஒரு சிறந்த மையமாக இப்பீடம் வளர்ச்சியடையும் என நான் நம்புகிறேன்”, என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்தஸாம் அல்கஹ்தானி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் பேராசிரியர் சுனில் செனவி, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன உள்ளிட்ட இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் பைசல் எம். அல்கஹ்தானி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஏ. ஆரியதுரை, சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம். என். விக்ரமரத்ன உள்ளிட்ட உயர்கல்வித் துறை அதிகாரிகள், பீடாதிபதிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.