சாய்ந்தமருதில் போதைப்பொருளுடன் தப்பிச் சென்ற மூவரை துரத்திச் சென்று கைது செய்த பொலிஸார் !!



அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை பொலிஸார் துரத்திச் சென்று கைது செய்த சம்பவம் சனிக்கிழமை (04) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் முன்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, 32, 33 மற்றும் 34 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 15 கிராம் 370 மில்லிகிராம் ஹெரோயின், ஒரு சொகுசு கார், ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு கைத்தொலைபேசிகள், பணத்தொகை மற்றும் பல வங்கி அட்டைகள் என்பன சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்னாயக்க தலைமையிலான குழுவினர், கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அதிகாலை சுமார் 3.00 மணியளவில் சோதனை நடத்தச் சென்றிருந்தனர்.

அப்போது, குறித்த வீட்டின் அருகில் இருந்த கார் ஒன்றில் இருவர் தப்பிச் சென்றதாகவும், அவர்களை பொலிஸார் துரத்திச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மற்றொரு சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் சென்று தப்பிச் சென்றவர்களுக்கு வழிகாட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனை அவதானித்த பொலிஸார் முதலில் மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேகநபரை கைது செய்ததுடன், பின்னர் தப்பிச் சென்ற காரை சாய்ந்தமருது பகுதியில் மறித்து நிறுத்தி அதிலிருந்த இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், பொலிஸார் சோதனை மேற்கொள்ளச் சென்ற வீட்டில் இருந்த போதைப்பொருட்களில் பெரும்பகுதி, பொலிஸார் அங்கு சென்றடைவதற்கு முன்னரே பல்வேறு பகுதிகளில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவ இடத்திற்கு பொலிஸ் தடயவியல் பிரிவு, மோப்ப நாய் பிரிவு உள்ளிட்ட விசாரணைப் பிரிவினரும் வருகை தந்து மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டனர்.

கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சுஜித் வேதமுல்ல, அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரியந்த பண்டார கஸ்தூரியாரச்சி மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ், பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்னாயக்க தலைமையிலான அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.