பேஸ்புக் முட்டாள்களால் நிறைந்த இடம்; நான் அதைப் பயன்படுத்துவதில்லை – தயாசிறி ஜயசேகர



எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பேஸ்புக் என்பது "முட்டாள்களால் நிரம்பிய இடம்" என்பதால் தாம் அதைப் பயன்படுத்துவதில்லை என தெரிவித்துள்ளார்.

பொதுநிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், சமூக ஊடகமான பேஸ்புக் அறிவார்ந்த விவாதங்கள் நடைபெறும் தளமாக இல்லை என்றும், அதனால் அதைப் பயன்படுத்தவோ பார்க்கவோ விரும்புவதில்லை என்றும் கூறினார்.

"நான் பேஸ்புக்கிற்கு செல்வதில்லை. அது முட்டாள்களால் நிறைந்துள்ளது. அறிவாளிகள் கருத்துப் பரிமாறும் களமல்ல அது. அதனால்தான் நான் அதைப் பயன்படுத்துவதில்லை; பார்ப்பதுமில்லை," என அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை குற்றவாளிகள், இனவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அல்லது ஊழல்வாதிகள் என சித்தரித்து அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பின்னர், தங்களது பெயரை மீண்டும் சுத்தப்படுத்தி அரசியல் பணிகளை முன்னெடுத்துச் செல்வது மிகவும் கடினமாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், தயாசிறி ஜயசேகர தனிப்பட்ட முறையில் பேஸ்புக்கைப் பயன்படுத்துவதில்லை என்று கூறியிருந்தாலும், அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு, அரசியல் நடவடிக்கைகள், காணொளிகள் மற்றும் அறிக்கைகள் வழமையாகப் பதிவேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.