எல் நினோ–லா நினா தாக்கங்களுக்கு அறிவியல் அடிப்படையிலான தேசிய கொள்கை அவசியம் – சஜித்


எல் நினோ மற்றும் லா நினா காலநிலை நிலைமைகளால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக அறிவியல், தரவுகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் தேசிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகள் தொடர்பில் நிபுணர்களுடன விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் மெட்ரோபொலிட்டன் விரிவுரையாளர் ஸ்ரீநாத் பெர்னாண்டோ, சுற்றுச்சூழல் நிபுணர் கலாநிதி ஸ்பென்சர் விதாரண, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதான பொருளாதார அதிகாரி ஹசிதா விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியின் மூத்த சுற்றுச்சூழல் நிபுணர் நதீர ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகள் விவசாயம், உணவுப் பாதுகாப்பு, நீர் வளங்கள் மற்றும் பொருளாதாரத்தின் மீது தீவிர தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை. எனவே நிபுணர்களின் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் நாட்டின் கொள்கைத் திட்டங்களில் இணைக்கப்பட வேண்டும். இந்த விடயங்கள் பாராளுமன்றத்தின் கவனத்தில் கொண்டு செல்லப்பட்டு, காலநிலை மாற்றங்களின் தாக்கங்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகள் காரணமாக வறட்சி, வெள்ளப்பெருக்கு, அதிக வெப்ப அலைகள், நீர்ப்பற்றாக்குறை மற்றும் உணவு உற்பத்தியில் வீழ்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வதோடு பணவீக்கமும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது.

1982, 1997-1998 மற்றும் 2015-2016 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட எல் நினோ நிலைமைகள் உலகளாவிய காலநிலை நெருக்கடிகளை தீவிரப்படுத்தியிருந்தது. தற்போது மிக வலுவான எல் நினோ நிலைமை உருவாகும் சாத்தியம் குறித்து உலக காலநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், காலநிலை மாற்றங்களின் தாக்கங்களை எதிர்கொள்வதில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் உட்கட்டமைப்பு, நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியான பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. காலநிலைத் தாங்குதிறனை மேம்படுத்தும் தேசியத் திட்டங்கள் மற்றும் போதுமான முன்னேற்பாடுகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் என்றார்.