.jpg)
நாடளாவிய ரீதியில் தற்போது தீவிரமடைந்துள்ள டெங்கு தீவிர பரவல் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள், நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களை பராமரித்து வந்த நபர்களுக்கு எதிராக 7,500 க்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை, நாட்டின் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தி, மக்களின் ஆரோக்கியத்தையும் உயிரையும் பாதுகாப்பதே இதன் ஒரே நோக்கம் ஆகும்.
இச் செயற்பாட்டின் காரணமாக ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களிலும் வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வளாகங்களும் தொடர்ச்சியான சோதனைக்கு உட்படுத்தப்படும்.
நாட்டில் டெங்கு பரவல் ஆரம்பித்தது முதல் தற்போது வரை நாடளாவிய ரீதியில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு பெருகும் இடங்களை வைத்திருந்தோருக்கு எதிராக சுமார் 7,500 சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இனிவரும் காலங்களில், வீடுகளிலோ அல்லது நிறுவன வளாகங்களிலோ நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டால், எவ்வித முன்னறிவித்தலோ அல்லது எச்சரிக்கை அறிவித்தல்களோ இன்றி, நேரடியாகவே நீதிமன்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் தங்கள் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது என்றார்.






.jpg)






