சட்டவிரோதமான முறையில் வாகனத்தைப் பதிவு செய்த மோட்டார் போக்குவரத்து திணைக்கள முன்னாள் அதிகாரி கைது



சட்டவிரோதமான முறையில் மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்து உரிமையை மாற்றியமைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் மேலாண்மை சேவை அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அனுமதி பெறாமலும், உரிய சுங்க வரிகளைச் செலுத்தாமலும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கார் ஒன்றை முறைகேடாகப் பதிவு செய்ய உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின்கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், குறித்த வாகனத்தின் முதற்கட்ட உரிமை மாற்றத்திற்குத் தேவையான ‘கவுண்டர் இலக்கத்தை’ வழங்கி, அது தொடர்பான தகவல்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ளீடு செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பணியாற்றிய முன்னாள் மேலாண்மை சேவை அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.