
தேசிய மக்கள் சக்தி (NPP) முன்வைத்துள்ள, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு முதலமைச்சர் பதவி உள்ளிட்ட அரசியல் இலஞ்சங்கள் வழங்க முன்வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.
நேற்று (26) இரத்தினபுரியில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய அவர், இந்தக் குற்றச்சாட்டு தேசிய மக்கள் சக்தியின் "புதிய பொய்" எனக் குறிப்பிட்டதுடன், தனது கட்சி ஒருபோதும் அரசியல் இலஞ்சங்களில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை எதிர்ப்பதற்காக முதலமைச்சர் பதவி வழங்குவதாக SJB உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் தெரிவித்திருந்தமை முற்றிலும் பொய்யானது என்றும் அவர் கூறினார்.
"SJB ஒருபோதும் யாருக்கும் அரசியல் இலஞ்சம் வழங்கியதில்லை. சுயாதீனமான நீதித்துறையை உறுதியாக ஆதரிக்கும் கட்சி நாங்களே" என சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
மேலும், நீதித்துறையின் சுயாதீனத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க முயற்சிப்பதுடன் காலியாக உள்ள நீதிபதி பதவிகளை நிரப்பத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், தேயிலை, ரப்பர், கறுவா மற்றும் மாணிக்கம் போன்ற வளங்கள் இருந்தபோதிலும் அவற்றை மேம்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாகவும், எரிபொருள் விலை, மின்கட்டணக் குறைப்பு மற்றும் நெல்லுக்கான உத்தரவாத விலை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





.jpg)


.jpg)




