சீரற்ற காலநிலையால் 11 மாவட்டங்களில் 16,345 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு


நாட்டின் பல பாகங்களிலும் நிலவி வரும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 83 பிரதேச செயலகப் பிரிவுகளின் 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 நபர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் நுவரெலியா மாவட்டத்தில் 6 பேரும், கண்டி, புத்தளதம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் உட்பட இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், ஒரு வீடு முழுமையாகவும் 581 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன், 43 முகாம்களில் 682 குடும்பங்களைச் சேர்ந்த 2,504 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

மாவட்ட ரீதியிலான பாதிப்புகள் மற்றும் போக்குவரத்துத் தடை

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி, நுவரெலியா மாவட்டத்தில் 7,288 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,371 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 2,487 பேரும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கேகாலை மாவட்டத்தில் யட்டியாந்தோட்டை - பூநாகலை - மீநாகலை வீதி மண்சரிவு காரணமாக மூடப்பட்டு இலகுரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மலையக ரயில் பாதையில் ரம்புக்கனையிலிருந்து நானுஓயா வரையிலான ரயில்; சேவைகள் முற்றிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள்

கண்டி மாவட்டத்தின் உடுதும்புர பிரதேச செயலகப் பிரிவுக்கு உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு சிவப்பு எச்சரிக்கையும், கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் மழையுடனான வானிலையால் பேராதனைப் பகுதியில் மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் மகாவலி ஆற்றுப் படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த பொல்பிட்டிய, பொல்கொல்ல, கேன்யான், லக்ஷபான மற்றும் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

வானிலை முன்னறிவிப்பு மற்றும் வறட்சி நிலைமை

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழையும் மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 60-70 கி.மீ வரை அதிகரிக்கும் என்பதால் மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், பொலன்னறுவை மற்றும் அம்பாறை போன்ற வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் விவசாயமும் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன.