தவறு செய்தவர்களுக்கும் சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களுக்குமே 22ஆவது திருத்தம் பயத்தை ஏற்படுத்தும் – பிரதியமைச்சர் எரங்க குணசேகர



தவறு செய்தவர்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களுக்கே 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பயத்தை ஏற்படுத்தும் என நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க குணசேகர சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் எழும் எதிர்ப்புகள் குறித்து எவரேனும் அதிருப்தி அடைந்திருந்தால், அதற்கு எதிராக உரிய அதிகார வரம்பைக் கொண்ட உச்சநீதிமன்றத்தை அணுகி தமது கருத்துக்களை சமர்ப்பிக்க முடியும். அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்துக்கு அமைவாக பாராளுமன்றப் பரிந்துரைகளைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.

மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். குறிப்பாக, பல வருடங்களாகத் தாமதமடைந்து வரும் நீதித்துறையின் செயற்பாடுகளை விரைவுபடுத்துவது மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாகும். அதற்காகவே இந்த திருத்தத்தை கொண்டுவந்து நீதிபதிகளின் சேவைக் காலத்தை மேலும் நீடிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு அரசாங்கம் முற்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. தவறு செய்தவர்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களுக்கே இதன் மூலம் பயம் ஏற்படும். ஆனால், நாட்டு மக்களுக்கு நீதியும் நியாயமும் விரைவாகக் கிடைப்பதே அவசியமாகும்.

முன்னதாக ஆறு ஆண்டுகள் வரை இழுபறியில் இருந்த வழக்குகள் தற்போது ஒரு சில மாதத்தில் விசாரணை செய்து முடிக்கும் நிலை உருவாக்கப்படும் என்று நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு வழக்குகள் விரைவுபடுத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படுவது மக்களுக்கு நன்மை பயக்கும் விடயமாகும். நாட்டில் அரசியல் ரீதியாகவும் ஏனைய வழிகளிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே நீதியாகும்.

நாட்டில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக எவருடனும் ஒன்றிணையத் தயார் என்று தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகின்றார். ஆனால், மக்கள் அவ்வாறு சிந்திக்கவில்லை. மக்கள் மீதுள்ள அக்கறையினால் அல்லாமல், அரசியல் ரீதியாகத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்ற பயத்தினாலேயே தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இவ்வாறு கூச்சலிடுகின்றனர் என்றார்.