திருக்கோவிலில் நெல் கொள்வனவில் தராசு மோசடி கண்டுபிடிப்பு ; விவசாயிக்கு ஏற்படவிருந்த ரூ.2.5 இலட்சம் இழப்பு தவிர்ப்பு


திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் தராசு அளவீட்டு மோசடி, பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மற்றும் அதிகாரிகளின் தலையீட்டினால் கண்டறியப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

விநாயகபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் தனது நெல் மூடைகளை விற்பனை செய்வதற்காக எடைபோட்டுக்கொண்டிருந்தபோது, தராசின் அளவீட்டில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தவிசாளர் மற்றும் பிரதேச சபை அதிகாரிகள், அங்கு பயன்படுத்தப்பட்ட தராசைப் பரிசோதித்தபோது அது தவறான அளவீட்டைக் காட்டியமை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் குறித்த விவசாயிக்கு ஏற்படவிருந்த சுமார் ரூ.2.5 இலட்சம் வரையான நிதி இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நெல் கொள்வனவாளர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நெல் விற்பனையின்போது பயன்படுத்தப்படும் தராசுகளின் அளவீடுகள் குறித்து விவசாயிகள் விழிப்புடன் இருக்குமாறு திருக்கோவில் பிரதேச சபை கேட்டுக்கொண்டுள்ளது. தராசு மோசடி அல்லது சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பில் 067-2265018 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.