டிசம்பர் 31க்கு பின்னர் வாகனங்களுக்கான சுங்க மேலதிக வரி நீக்கப்படுமா? – பிரதியமைச்சர் விளக்கம்



வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க மேலதிக வரியை (Customs Surcharge) டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் நீக்குவது தொடர்பான தீர்மானம், நாட்டின் அந்நியச் செலாவணி நிலைமையைப் பொறுத்தே அமையும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் வாகனங்களின் விலை மற்றும் இறக்குமதி வரிகள் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதற்காக முன்னர் வாகன இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகன இறக்குமதி எதிர்பார்க்கப்பட்ட போதிலும், வரிகள் மற்றும் மேலதிக கட்டணங்களையும் உள்ளடக்கிய நிலையில் இந்த ஆண்டில் அது சுமார் 2.1 பில்லியன் டொலரை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வாகன இறக்குமதி அதிகரிப்புடன் எரிபொருள் தேவையும் அதிகரித்துள்ளதால், இறக்குமதியின் வேகத்தைக் கட்டுப்படுத்த தற்காலிக நடவடிக்கைகள் தேவைப்பட்டதாகவும், அதன் ஒரு பகுதியாகவே சுங்க மேலதிக வரி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் குறித்த மேலதிக வரி நீக்கப்படுமா என்பதை தற்போது உறுதியாகக் கூற முடியாது என்றும், அப்போதைய அந்நியச் செலாவணி நிலைமையின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் அரச வருமானமும் ஸ்திரமடைந்த பின்னர் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை (Vehicle Import Permits) மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்தும் பரிசீலிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.