கிளிநொச்சியில் 380 கடல் அட்டைகளுடன் சந்தேகநபர் கைது!


கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதிப்பத்திரமின்றி 380 கடல் அட்டைகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் 34 வயதுடைய ஒருவர் இலங்கை கடற்படையினரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் SLNS Buwaneka கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர், கிராஞ்சி கடற்கரையை நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான பாரம்பரிய படகு ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, உரிய அனுமதிப்பத்திரமின்றி படகிலிருந்து கடல் அட்டைகளை கரைக்கு எடுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து 380 கடல் அட்டைகளும் படகும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட படகு மற்றும் கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.