கடல் நத்தை ஓட்டை ரூ.5 இலட்சத்திற்கு விற்க முயன்றவர் கைது




இலங்கையில் பாதுகாக்கப்பட்ட கடல் நத்தை இனமொன்றான ‘Horned Helmet’ (Cassis cornuta) நத்தையின் ஓட்டை ரூ.5 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய, படலங்கல பகுதியில் கடந்த 17ஆம் திகதி கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் குறித்த நத்தை ஓட்டுடன் கைது செய்யப்பட்டார்.

அவர் நத்தை ஓட்டை ரூ.500,000க்கு விற்பனை செய்வதாக சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தைக் கண்காணித்த வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

பின்னர் சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட நத்தை ஓடும் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு ரூ.40,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பாதுகாக்கப்பட்ட கடல் நத்தை இனங்களை பிடித்தல், வைத்திருத்தல் மற்றும் அவற்றின் ஓடுகளை விற்பனை செய்தல் என்பன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.