ரூ.5 இலட்சம் இலஞ்ச குற்றச்சாட்டு : மொனராகலை பொலிஸார் நால்வர் கைது


மொனராகலை பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள், 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தணமல்வில, நிக்கவெவ தெமோதர குளத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா பயிர்ச்செய்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக இந்த இலஞ்சம் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் புத்தல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட், தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட், பிபில பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி மற்றும் 36 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் அடங்குகின்றனர்.

குறித்த பகுதியில் கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதாக தணமல்வில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 11ஆம் திகதி பொலிஸ் குழுவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கஞ்சா பயிர்ச்செய்கையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் மூன்று கஞ்சா பயிர்ச்செய்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மற்றுமொரு கஞ்சா பயிர்ச்செய்கை வெட்டி அழிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 10ஆம் திகதி மொனராகலை குற்றப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு வந்து தன்னிடமிருந்து 5 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், ஒரு கஞ்சா பயிர்ச்செய்கையை மாத்திரம் எரித்து அழித்துவிட்டு, எஞ்சிய கஞ்சாவை எடுத்துச் சென்றதாகவும் சந்தேகநபர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நிக்கவெவ பகுதியைச் சேர்ந்த ‘களு’ என அழைக்கப்படும் மற்றுமொரு சந்தேகநபரும் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சாவை உலர வைக்குமாறு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னிடம் கூறியதாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மொனராகலை குற்றப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தணமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.