வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாக கூறி ரூ.66 இலட்சத்திற்கும் அதிக பண மோசடி – 21 வயது இளைஞர் கைது


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து ரூ.66,44,000 பணத்தை இணையவழி வங்கி பரிவர்த்தனைகள் மூலம் மோசடி செய்ததாகக் கூறப்படும் 21 வயதுடைய சந்தேகநபர் கணினி குற்றப்புலனாய்வு பிரிவின் வடமேல் மாகாண பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பங்கதெனிய, குருக்குப்பனையைச் சேர்ந்த 28 வயது பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அம்பிளாந்துறையைச் சேர்ந்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 3 மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று (04) சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.