காரைதீவில் ரூ.7.5 மில்லியன் வீதி புனரமைப்பு – பணிகளின் தரத்தை ஆய்வு செய்த தவிசாளர்


காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட திருமால்முக வீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் திடீர் ஆய்வுக்கு உட்படுத்தினார்.

குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகள் டித்வா பேரிடர் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ரூ.7.5 மில்லியன் செலவில், காரைதீவு பிரதேச சபையின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆய்வின்போது கருத்துத் தெரிவித்த தவிசாளர், கடந்த வெள்ள அனர்த்த காலங்களில் இந்த வீதியைப் பயன்படுத்திய மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார்.

மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் நேர்த்தியாகவும் தரமானதாகவும் அமைய வேண்டும் என தெரிவித்த அவர், மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களின் தரத்தையும் பிரதேச சபையும் அதன் உத்தியோகத்தர்களும் தொடர்ச்சியாகக் கண்காணிப்பார்கள் என குறிப்பிட்டார்.

இந்த ஆய்வில் வேலைத்திட்டத்திற்குப் பொறுப்பான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.