மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் சாக்குப்போக்குகளைக் கூறுகிறது – வசந்த முதலிகே


மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற தேவை அரசாங்கத்துக்கு இருக்குமாயின், எல்லை நிர்ணய ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு மூலமாகத் தேவையான தீர்மானங்களை எடுத்திருக்க முடியும். அல்லது புதிய சட்டங்கள் தேவை எனின் அரசாங்கத்துக்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்களை இயற்றியிருக்க முடியும் மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே சுட்டிக்காட்டினார்.

நுகேகொடையில் அமைந்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வசந்த முதலிகே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற தேவை அரசாங்கத்துக்கு இருக்குமாயின், எல்லை நிர்ணய ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு மூலமாகத் தேவையான தீர்மானங்களை எடுத்திருக்க முடியும்.

அல்லது புதிய சட்டங்கள் தேவை எனின் அரசாங்கத்துக்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்களை இயற்றியிருக்க முடியும்.

இந்த இரண்டையும் செய்யாத அரசாங்கம், ஏனைய திருத்தங்கள் மற்றும் சட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றும் அதேவேளையில், மாகாண சபைச் தேர்தலை நடத்துவதற்கு மட்டும் பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறி வருகின்றது.

அரசாங்கம் மக்கள் மீதான பயம் மற்றும் தயக்கம் காரணமாகவே இவ்வாறான விடயங்களைக் காலந்தாழ்த்தி வருகின்றது.

மாகாண சபைச் தேர்தல்கள் நடத்தப்பட்டாலும் மக்களின் பிராந்தியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் எனக் கருதுவது ஒரு ஏமாற்று வேலையாகும். இதற்கு முன்னரும் மாகாண சபைகளும் மக்கள் பிரதிநிதிகளும் இருந்தபோதிலும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிடைக்கவில்லை.

அக்காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விடத் தமது பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்வது, கமிஷன் பெறுவது, வீடுகள் மற்றும் வாகனங்களைக் கட்டியெழுப்புவது, வாகன அனுமதிப்பத்திரங்களைப் பெறுவது மற்றும் தமக்கு நெருக்கமானவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவது ஆகிய சுயநல எண்ணங்களே மேலோங்கியிருந்தன.

எனவே மாகாண சபைகள் இருந்ததா இல்லையா என்பதைக் காட்டிலும் பிராந்திய அரசியல்வாதிகள் எவரும் மக்களின் துயரங்களைப் புரிந்துகொள்ளவில்லை.

தற்போது திலித் ஜெயவீர, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ போன்றோர் ஆங்காங்கே கூட்டங்களை நடத்தி வருவது போல அரசாங்கமும் மக்கள் ஆதரவை இழந்துவிட்ட பயத்தில் பிரசாரக் கூட்டங்களை நடத்தத் திட்டமிடுகின்றது. புதிய ஜனாதிபதி ஒருவர் வந்தால் பிரச்சினை தீரும் என நினைத்தார்கள், ஆனால் தீரவில்லை.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தால் பிரச்சினை தீரும் என நினைத்தார்கள், அதுவும் நடக்கவில்லை. உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கினால் தீர்வு கிடைக்கும் என நினைத்தார்கள், அதுவும் நிறைவேறவில்லை.

எனவே மாகாண சபை வந்தவுடன் அற்புதங்கள் நிகழும் என்பது மற்றொரு மாயையாகும். மாகாண சபைச் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் அது மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது என்று வசந்த முதலிகே மேலும் தெரிவித்தார்.