
வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டியேகெதர - வலல வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் பின்புறம் கிணறு வெட்டுவதாகக் கூறி புதையல் தோண்ட நடவடிக்கையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (05) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தேகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில பண்டாரவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பெண் குறித்த வீட்டின் உரிமையாளர் என்பதோடு, மற்றைய இரு ஆண்களும் மஹியங்கனை மற்றும் மாவில்மடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
குறித்த வீட்டின் பின்புறத்திலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் இந்த குழி தோண்டப்பட்டுள்ளதாகவும், அது சுமார் 20 முதல் 25 அடி வரை ஆழத்தில் தோண்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சாராசரி கிணறு வெட்டும் பணி என்றே குறித்த பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும், அங்கு கண்டெடுக்கப்பட்ட பூஜை பொருட்கள் மற்றும் குழி தோண்டப்பட்டிருந்த விதம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விடத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவ்வப்போது அகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும், சில சமயங்களில் கல்வெடிச் சத்தங்கள் கேட்பதாகவும் பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இச்சோதனையின் போது நீர் இறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார், 2 அங்குல விட்டம் கொண்ட நீர் குழாய்கள், ஏணி, சுமார் 40 அடி நீளமான 4 கயிறுகள், கடல் மணல், சாம்பிராணி (தும்மல) மற்றும் தீப்பந்தங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று வியாழக்கிழமை (06) பன்விலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.





.jpg)







.jpg)