கஞ்சா போதையில் பொலிஸ் ஜீப்பை செலுத்தி விபத்து – மட்டக்களப்பில் பொலிஸ் சாரதி பணியிடைநீக்கம்!


மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் பொலிஸ் ஜீப் மோதியதில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதி, கஞ்சா போதையில் வாகனத்தைச் செலுத்தியமை வைத்தியப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து நேற்று புதன்கிழமை (26) உடனடியாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை இரவு, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய ஜீப் வண்டியில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் ஜீப் மோதியது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபரின் கால் முறிவடைந்து படுகாயமடைந்த நிலையில் அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தையடுத்து பொலிஸ் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டு வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

எனினும், குறித்த பொலிஸ் சாரதி கஞ்சா போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளார் என்பது வைத்தியப் பரிசோதனை அறிக்கையில் உறுதிசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பொலிஸ் சாரதியை உடனடியாகச் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.