ஜனாதிபதி – சட்டத்தரணிகள் சங்க சந்திப்பின் முழு விபரங்களையும் வெளியிட வேண்டும் – சீலரத்ன தேரர்


ஜனாதிபதியுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடத்திய கலந்துரையாடலின் முழுமையான தகவல்களையும் உடனடியாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனசெத பெரமுன கட்சியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் அதன் தலைவர் ரஜீவ் அமரசூரிய ஆகியோருடன் ஜனாதிபதி செயலகத்தில் நீதிபதிகளின் பணிக்காலத்தை நீடிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

ஆனால், இந்த சந்திப்பில் ஜனாதிபதி பேசிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி ஊடகப் பிரிவு மக்களுக்குக் காட்டியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஏனைய பிரதிநிதிகளும் முன்வைத்த முக்கியமான கருத்துக்களையும் மக்களின் பக்க நியாயங்களையும் ஊடகங்களுக்கு வெளியிடாமல் மூடிமறைத்துள்ளனர்.

ஜனாதிபதியை மட்டும் உயர்த்திப் பிடிக்கும் இத்தகைய ஊடகப் பிரிவினர், தங்களது தலைவரையும் அரசையும் மக்கள் மத்தியில் தவறாகவே சித்தரிக்கின்றனர்.

ஜனாதிபதிக்கு உண்மையைக் கூறாமல் புகழ்பாடும் இந்த அதிகாரிகளால் இறுதியில் மக்களின் விமர்சனங்களுக்குள்ளாகுவது ஜனாதிபதியே ஆகும்.

எனவே, ஜனாதிபதி தமக்குச் சுற்றியுள்ள நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்களுக்குச் நிவாரணம் வழங்க வேண்டுமே தவிர, நீதிபதிகளின் பணிக்காலத்தை நீடிப்பது தற்போதைய அவசரத் தேவையில்லை

எதிர்வரும் 18 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. ஆளும்கட்சியின் 159 உறுப்பினர்களும் இதற்குக் கை உயர்த்தக் கூடாது.

மனசாட்சிக்கு விரோதமாகச் செயற்பட விரும்பாவிட்டால், அன்றைய தினம் விடுமுறை எடுத்துக்கொண்டு மண்வெட்டி அல்லது கத்தியை எடுத்துக்கொண்டு தத்தமது வயல்வெளிகளுக்குச் சென்று விவசாய வேலையையாவது செய்யுங்கள். 159 பெரும்பான்மை இருக்கிறது என்ற அகந்தையில் செயல்பட வேண்டாம். அதிகாரம் மரணம் வரை நிலைத்திருக்காது.

நாட்டில் உள்ள சட்ட வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் இந்த 22 ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில், நீதிபதிகளின் பணிக்காலத்தை நீடிப்பதன் மூலம் அரசாங்கம் எதனைச் சாதிக்கப் போகிறது என்பதை விளக்க வேண்டும்.

மக்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகளால் தவிக்கும் நிலையில், நீதிமன்ற விவகாரங்களில் மட்டும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. எனவே, இந்தத் திருத்தத்தைக் கைவிட்டு, மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.