இதனைத் தொடர்ந்து, ஆபத்து ஏற்படக்கூடிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நவலப்பிட்டி, நானுஓயா மற்றும் வட்டவளை உள்ளிட்ட மகாவலி ஆற்றின் மேல் பகுதியில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிகக் கடும் மழை பதிவாகியுள்ளது.
நவலப்பிட்டியிலிருந்து பேராதனை வரையான மகாவலி ஆற்றங்கரையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் சாத்தியமான வெள்ளப்பெருக்கு அபாயத்தைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதைக்கு நீர்மட்டம் படிப்படியாகவே அதிகரித்து வருகின்றது. 'தித்வா' சூறாவளியின் போது ஏற்பட்ட அளவிலான பாரிய வெள்ளப் பெருக்கு அபாயம் தற்போது உருவாக வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
லக்ஷபான, நோர்வூட் உள்ளிட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 100 மில்லி மீற்றர் முதல் 150 மில்லி மீற்றர் வரை மழை பதிவாகியுள்ளது.
கித்துள்கலை போன்ற மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உயர்ந்த நீர்மட்டம் தற்போது சற்று குறைய ஆரம்பித்துள்ளது.
எனினும், ஹங்வெல்ல மற்றும் அவிசாவளைக்கு இடைப்பட்ட பகுதிகளிலும், அவிசாவளை, கித்துள்கலை மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட தாழ்நிலங்களிலும் வெள்ளப் பெருக்கு அபாயம் நிலவுகிறது. ஆற்றின் கீழ்நோக்கிய பகுதிகளில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
இரத்தினபுரியின் மேல் பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தை நெருங்கியுள்ள போதிலும், திடீர் உயர்வெதுவும் பதிவாகவில்லை. எனினும் தாழ்நிலப் பகுதிகள் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் உள்ளன.
ஈரவலயத்தில் உள்ள நில்வளவை மற்றும் ஜின் ஆற்றுப் பகுதிகளில் 50 மி.மீ முதல் 75 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது. எனினும் இவை உடனடியாக வெள்ளப்பெருக்கு மட்டத்தை எட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹா மற்றும் அத்தனகலு ஆற்றுப் பகுதிகளில் குறைந்தளவே மழை பதிவாகியுள்ளதால், தற்போது வரை எவ்வித வெள்ளப் பெருக்கு அச்சுறுத்தலும் இல்லை.







.jpg)



.jpg)


