தற்போதைய அரசாங்கத்தை விட சிறந்த நிர்வாகத்தை வழங்குபவர்களால் மட்டுமே இனி ஆட்சிக்கு வர முடியும் –அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி



எதிர்காலத்தில் ஆட்சியை கைப்பற்றக் கனவு காண்பவர்கள் பெற்றோர் ஆட்சிக் காலத்தில் அனுபவித்த பழைய சலுகைகள் இனி ஒருபோதும் கிடைக்காது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதேவேளை மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில், தற்போதைய அரசாங்கத்தை விட மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கக்கூடிய ஒரு அரசியல் தரப்பினால் மட்டுமே இனி இலங்கையில் ஆட்சியை மேற்கொள்ள முடியும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மாத்தறை, அதுருகிரிய பிரதேசத்தில் நடைபெற்ற விசேட மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் நாட்டில் நிலவி வந்த பணபலத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்திற்குச் சென்ற பழைய அரசியல் கலாச்சாரம் இனி நடைபெறாது என்பதை மக்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர். முன்னைய ஆட்சிகளில் குறிப்பிட்ட சில குடும்பங்களும், அவர்களின் நண்பர்களும் அதிகாரத்தையும், சிறப்புச் சலுகைகளையும் தங்களுக்குள்ளேயே பகிர்ந்து அனுபவித்து வந்ததோடு தாங்கள் செய்த தவறுகளுக்கு ஒருபோதும் சட்டத்தின் முன் தண்டனை கிடைக்காது என்று நம்பியிருந்தனர்.

ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக மாறியுள்ளது. இதனால் எவ்வித தவறும் செய்யாத சாதாரண பொதுமக்கள் சட்டத்தைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டியதில்லை. மாறாக கடந்த காலத்தில், சட்டத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியவர்களும், தவறுகளில் ஈடுபட்டவர்களுமே தற்போதைய நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது தவறான கருத்துக்களை வெளியிட்டும், அச்சமடைந்தும் வருகிறார்கள்.

தற்போதைய ஆட்சியில் ஜனாதிபதி, அமைச்சர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் என யாருக்கும் எந்தவித சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படவில்லை; ஜனாதிபதி உட்பட அனைவரும் சாதாரண பொதுமக்களைப் போலவே தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அலரி மாளிகை போன்ற அரச சொத்துக்கள் மற்றும் மண்டபங்கள் அரசியல் கூட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், அதற்கான உரிய கட்டணங்கள் செலுத்தப்பட்டே பயன்படுத்தப்படுகின்றனவே தவிர, இலவசமாக எதையும் பயன்படுத்த அனுமதி இல்லை. எனவே, எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றக் கனவு காண்பவர்கள், தங்களின் பெற்றோர் ஆட்சிக் காலத்தில் அனுபவித்த பழைய சலுகைகள் இனி ஒருபோதும் கிடைக்காது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில், தற்போதைய அரசாங்கத்தை விட மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கக்கூடிய ஒரு அரசியல் தரப்பினால் மட்டுமே இனி இலங்கையில் ஆட்சிக்கு வர முடியும் என்றார்.