"மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசின் உண்மையான மக்கள் ஆதரவு வெளிப்படும்" – ஐக்கிய மக்கள் சக்தி



மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் உண்மை மக்கள் ஆதரவு வெளிப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மகரகம தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி இணை அமைப்பாளர் ஹேமப்ரிய கவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவும் தமக்கு நாட்டில் பாரிய மக்கள் ஆதரவு இருப்பதாக போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட குறுகிய காலத்திலேயே மக்களின் நம்பிக்கை முற்றாகச் சிதைவடைந்துள்ளது.

அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் உண்மையான செல்வாக்கையும் ஆதரவின் அளவையும் அறிந்துகொள்ள வேண்டுமானால், உடனடியாக முடக்கி வைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்திப் பார்க்க வேண்டும். தேர்தலை எதிர்கொண்டால் மக்கள் தமக்கு எதிரான தீர்ப்பை வழங்குவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே, அரசாங்கம் தேர்தல்களைத் திட்டமிட்டுப் பிற்போக்குத் தனமாக முடக்கி வைத்துள்ளது.

அரசாங்கத்தின் திசைகாட்டி அமைப்பானது நாட்டின் மலையகப் பகுதிக்கோ அல்லது வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட எந்தவொரு பகுதி மக்களின் நலன்களுக்காகவோ திசைதிரும்பிச் தொழிற்படவில்லை. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதித்துவமும் அதிகாரப் பகிர்வு உரிமைகளும் தேர்தல்கள் முடக்கப்பட்டதன் மூலம் முற்றாகப் பறிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் நிலைமையை உணராமல் இவர்கள் ஒரு விசித்திரமான உலகத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவிகளையும் பணத்தையுமே முதன்மை இலக்காகக் கொண்டு இந்த அரசாங்கத்தின் பொறிமுறை சுழல்கின்றது.

1931 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் நாட்டின் மக்கள் தேர்தல்கள் மூலமாகவே தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், தற்போதைய அரசாங்கம் மாகாண சபை மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் அதிகாரங்களைச் சட்டவிரோதமான முறையில் பிரயோகம் செய்து, மக்களாட்சி முறையைச் செயலற்றதாக்கியுள்ளது.

இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட அனைத்துப் பிரதேசங்களிலும் மக்கள் நலன்புரிச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் மக்களாட்சி உரிமைகள், மாகாண சபை பிரதிநிதித்துவம் மற்றும் நாட்டின் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்ட ரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் தொடர்ச்சியாகப் போராடும் என்றார்.