அரசாங்கம் மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காகவே நாடு தழுவிய ரீதியில் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது - சஜித் பிரேமதாச
அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. பொய் வாக்குறுதிகளை அளித்து அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம், மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காகவே நாடு தழுவிய ரீதியில் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டையில் வெள்ளக்கிழமை (28) மக்கள் சந்திப்பொன்றில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படும் எனத் தேர்தலுக்கு முன்னர் உறுதியளிக்கப்பட்ட போதிலும், தற்போது கிலோ ஒன்றுக்கு 120 ரூபா மாத்திரமே வழங்கப்படுகிறது.
ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகிறது என விவசாய அமைச்சரே பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இதன் மூலம் ஒவ்வொரு கிலோ நெல்லிலும் விவசாயிகளுக்கு 17 ரூபா நஷ்டம் ஏற்படுகிறது.
நாட்டில் ஆண்டுக்கு 32 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. 25 இலட்சம் மெட்ரிக் தொன் மட்டுமே உள்நாட்டுத் தேவையாக உள்ளது. அரிசி மேலதிகமாகக் காணப்படும் நிலையிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 3,80,000 மெட்ரிக் தொன் அரிசி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சரியான தேசிய விவசாயத் திட்டம் இல்லாததே இந்தத் தவறுக்குக் காரணமாகும்.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி ஒரு நபர் மாதாந்தம் வாழ்வதற்கு 17,315 ரூபா தேவைப்படும் நிலையில், தற்போதைய கணக்கீடுகளின்படி ஒரு விவசாயிக்கு மாதத்திற்கு 16,666 ரூபா மாத்திரமே வருமானமாகக் கிடைக்கிறது. இந்த வருமானத்தைக் கொண்டு ஒரு நபர் எவ்வாறு வாழ முடியும்?
அத்துடன், தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதியளித்தவாறு மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல், எரிபொருள் விலையைக் குறைத்தல் மற்றும் 'அஸ்வெசும' நிவாரணங்களை முறையாக வழங்குதல் போன்றவற்றை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
எல் நினோ தாக்கங்களால் நாட்டின் பல மாவட்டங்களில் வறட்சியும் வெள்ளப்பெருக்கும் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், இத்தகைய இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள முறையான மற்றும் திறமையான ஆபத்து மேலாண்மைத் திட்டம் நாட்டிற்கு அவசியமானது என்றார்.


.jpg)

.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)

.jpg)
.jpg)
