புற்றுநோயாளிகளுக்கான முக்கிய ஊசி மருந்துக்கு தற்காலிக தட்டுப்பாடு – ஒரு வாரத்துக்குள் தீர்வு!


புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 'ஃபில்காஸ்டிம்' (Filgrastim) ஊசி மருந்தின் சிரிஞ்ச்களில் லேபிள் அச்சிடப்படாமையால் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் காரணமாகவே தற்காலிக தட்டுப்பாடு நிலவுகிறது. எதிர்வரும் சில நாட்களுக்குள் இதனை வான்வழியாக இறக்குமதி செய்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படும்போது அவர்களின் இரத்தத்தில் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்த இந்த ஊசி மிகவும் அத்தியாவசியமாகும்.

நாட்டுக்கு ஆண்டிற்கு சுமார் 3 இலட்சம் வரையிலான ஊசிகள் தேவைப்படுகின்றன. அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மூலம் உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றி சீனாவிலிருந்து கடந்த ஜூலை மாதம் இந்த மருந்துத் தொகுதி இறக்குமதி செய்யப்பட்டது.

இருப்பினும், நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஊசிகளின் வெளிப்புறப் பெட்டியில் லேபிள் இருந்தபோதிலும், அதனுள் இருந்த சிரிஞ்ச்களில் லேபிள் ஒட்டப்பட்டிருக்கவில்லை. லேபிள் இல்லாத மருந்தைப் பயன்படுத்துவது தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் விதிகளுக்கு முரணானது என்பதால் அதனை விநியோகிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், லேபிள் அச்சிடப்பட்ட 18,000 ஊசிகளை உடனடியாக வான்வழியாகக் கொண்டுவருமாறு விநியோகஸ்தருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், லேபிள் இல்லாத தொகுதியை மீண்டும் சீனாவுக்கு அனுப்பி லேபிள் ஒட்டி எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் தடையின்றி கிடைக்கப்பெறும் என்றார்.