நேபாளத்தைப் போன்ற திடீர் பேரழிவு இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் ஏற்படலாம் – பேராசிரியர் எச்சரிக்கை!





நேபாளத்தில் இடம்பெற்ற பனிச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற திடீர் இயற்கை பேரழிவுகள் இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகப் பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கு நேபாளத்தின் பனிமலைகளில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு காரணமாகப் பனிப்பாறைகளும் மண்ணும் சரிந்து ஆறுகளின் நீரோட்டத்தை முழுமையாக அடைத்தன. இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய தற்காலிக நீர்த்தேக்கம் உருவாகி, பின்னர் அந்தத் தற்காலிக அணைக்கட்டு நீரின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் திடீரென உடைந்ததாலேயே அங்கு பேரழிவு தரும் பிரம்மாண்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதேபோன்ற ஆபத்து இலங்கையிலும் நிகழக்கூடுமா என்பது குறித்து பரவலாக கேட்க்கப்படுகின்றன. இலங்கையின் மத்திய மலைநாட்டிலும் நேபாளத்தில் உள்ளது போன்ற மிக ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளன. நாவலப்பிட்டி, ஹட்டன், நுவரெலியா, எல்ல, வெல்லவாய மற்றும் பண்டாரவளை ஆகிய பகுதிகளில் இத்தகைய ஆழமான பள்ளத்தாக்கு அமைப்புகள் காணப்படுகின்றன.

இப்பகுதிகளில் உள்ள மலைச் சரிவுகளில் ஆழமான மண் அடுக்குகள் மற்றும் கட்டமைப்புப் பலவீனங்கள் காணப்படுகின்றன. இதனால், குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் போது, எந்த நேரத்திலும் பாரிய மண்சரிவுகள் ஏற்படக்கூடும். அவ்வாறு சரிந்து விழும் மண் மற்றும் பாறைகள் பள்ளத்தாக்குகளில் ஓடும் நதிகளின் குறுக்கே விழுந்து நீரோட்டத்தைத் தடுத்து தற்காலிகக் குளங்களை உருவாக்கும். அவை நீரின் அழுத்தத்தால் திடீரென உடையும் போது கீழ்நோக்கிப் பாயும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றார்.