மத்திய வங்கி, FCID அதிகாரிகள் போல் நடித்து பண மோசடி – பொதுமக்களுக்கு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை



மத்திய வங்கி மற்றும் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) அதிகாரிகள் போன்று நடித்து, வங்கிகளில் வைப்பிலுள்ள பணத்தை மோசடி செய்யும் புதிய திட்டம் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடியில் ஈடுபடுபவர்கள் முதலில் தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக தொடர்புகொண்டு, சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக் கணக்குகளில் உள்ள பணம் தொடர்பான தகவல்களை கேட்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், குறித்த பணம் மோசடியான முறையில் பெறப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகக் கூறி, FCID விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அச்சுறுத்துவதாக SLCERT தெரிவித்துள்ளது.

அதன்பின்னர் மத்திய வங்கியின் பெயரில் போலியான கடிதத் தலைப்புகள், அதிகாரிகளின் கையொப்பங்கள் மற்றும் முத்திரைகளுடன் தயாரிக்கப்பட்ட கடிதங்களை அனுப்பி, வேறொரு தனியார் வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுமாறு அறிவுறுத்துகின்றனர்.

குறிப்பாக, அந்த வங்கிக் கணக்கு FCID அதிகாரி ஒருவருக்குச் சொந்தமானது எனக் கூறி, முதலில் வைப்புத் தொகையின் பாதியை மாற்றுமாறு கோருவதுடன், பணம் செலுத்தியதற்கான வங்கி ரசீதையும் அனுப்புமாறு கேட்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடிக் குழுவினர் பொலிஸ் சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் முத்திரைகள் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தி மிகவும் நம்பகத்தன்மையுடன் மோசடியில் ஈடுபடுவதாக SLCERT எச்சரித்துள்ளது.

குறிப்பாக ஓய்வுபெற்றவர்கள் மற்றும் வயோதிபர்கள் இவ்வாறான மோசடிகளுக்கு இலக்காகும் அபாயம் அதிகம் என்பதால், குடும்பத்தினர் அவர்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வங்கி விபரங்கள் அல்லது பணப் பரிமாற்றம் கோரி வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.