கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளது. பொய்யான தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த அவர், குறித்த இடம் கிளிநொச்சி மாவட்டத்தின் முகன்பம் பகுதியில் உள்ள கண்ணகிபுரத்தில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தக் காணி 1919ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புப் பகுதியாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரச காணியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோதப் பயிர்ச்செய்கை மற்றும் கட்டுமானங்களே இந்த விவகாரத்தின் பின்னணியாகும். இது தொடர்பாகப் பல தடவைகள் நீதிமன்றத் தலையீடுகளும் இடம்பெற்றுள்ளன.
2025ஆம் ஆண்டு முதல் குறித்த பகுதியில் காடழிப்பு மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக வனப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
குறித்த இடத்தில் இடம்பெற்ற நடவடிக்கைகள் தொடர்பாக தியாகராசா குலதீபன் என்பவருக்கு எதிராக ஏழு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் 10 ஏக்கர் காணி துப்புரவு செய்யப்பட்டதாகவும், பின்னர் அது 20 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டு கற்றாழை மற்றும் மரக்கறிச் செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஆடை உற்பத்தி நிலையத்தைக் கொண்ட மூன்று மாடிக் கட்டடமும் அந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் குறித்த நபரை காணியிலிருந்து வெளியேறுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என்றும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அகழ்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்ததாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
எனவே, இந்த விவகாரம் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமுடன் தொடர்புடையது அல்ல. அரச சொத்தைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம், பயிர்ச்செய்கை மற்றும் மணல் அகழ்வு தொடர்பான குற்றச்சாட்டுகளையே இது உள்ளடக்கியதாக அவர் விளக்கமளித்தார்.
இந்த நடவடிக்கைகளுக்குப் பிரதேச தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவு உள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், அரச காணிகளில் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் நாட்டின் பல பகுதிகளிலும் பதிவாகின்றன என்றார்.
எனவே, இத்தகைய சம்பவங்களை இனவாதக் கண்ணோட்டத்தில் அணுகாமல், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்





.jpg)





.jpg)
