இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கௌரவமாக நாடு திரும்புவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் – சாணக்கியன் MP



இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் மக்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடைமுறைகளை இலகுபடுத்துவதுடன், அவர்கள் எதிர்கொள்ளும் சட்ட ரீதியான மற்றும் நடைமுறைத் தடைகளை முழுமையாக நீக்கி, பாதுகாப்பாகவும் கௌரவத்துடனும் நாடு திரும்புவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று புதன்கிழமை (19) பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் பல முக்கியமான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

பல தசாப்தங்களாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மக்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றபோதிலும், அவர்கள் நாடு திரும்புவதற்கு முன்னரும், நாடு திரும்பிய பின்னரும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களையும் அச்சங்களையும் எதிர்கொண்டு வருவதாக சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக பாதுகாப்பு அனுமதி, குடியுரிமை உறுதிப்படுத்தல், பயண ஆவணங்கள், வீடமைப்பு, காணி மற்றும் சொத்துக்களுக்கான அணுகல், வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், இழப்பீடு மற்றும் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு தெளிவானதும் வெளிப்படையானதுமான பொறிமுறை ஒன்று அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய 75 வயதுடைய இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் கடந்த ஆண்டு பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் பாராளுமன்றத்தில் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் ஏனைய இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு விருப்பம் கொண்டிருந்த பலரும் இவ்வாறான சம்பவங்களை அறிந்து தமது முடிவை மீள்பரிசீலனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள எமது மக்கள் மீண்டும் இலங்கைக்கு வரவேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என தெரிவித்த சாணக்கியன், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எமது மக்களின் சனத்தொகை வீதம் தொடர்ந்து குறைந்து வருகின்ற நிலையில், பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் மீண்டும் தமது சொந்த நாட்டிற்கு வந்து குடியேறுவது முக்கியமானதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதன் மூலம் தமது குடும்பங்களுடனும், தமது சொந்த நிலங்களுடனும் மீண்டும் இணைந்து வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் மீண்டும் நாட்டுக்கு வருவதற்கான அனைத்து சட்ட ரீதியான மற்றும் நடைமுறைத் தடைகளையும் அரசாங்கம் நீக்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்த காலத்தில் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் நாட்டுக்கு வரும்போது, கடந்த காலங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான நிலைமையே பலர் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு தயக்கம் காட்டுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்கள் அல்லது துறைமுகங்கள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறாமல் இந்தியாவுக்குச் சென்றிருந்தாலும், அவர்கள் இலங்கைப் பிரஜைகளாக இருந்தால், பல தசாப்தங்களுக்குப் பின்னர் தமது சொந்த நாட்டுக்கு திரும்பி வருவதற்கான உரிமையை நடைமுறை ரீதியாக உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் அகதிகள் தங்களுடைய உடைமைகள் மற்றும் வீட்டுப் பொருட்களை பாதுகாப்பாக நாட்டுக்கு கொண்டு வருவதற்காக விசேட படகுச் சேவை அல்லது அதற்கான மாற்று போக்குவரத்து வசதி ஒன்றை அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் தங்களிடம் உள்ள அத்தியாவசிய பொருட்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட உடைமைகளை எடுத்துக்கொண்டு வர வேண்டிய நிலை காணப்படுவதால், அவர்களுக்கு பயண வசதியை வழங்குவது மாத்திரமன்றி, அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பாக நாட்டுக்கு கொண்டு வருவதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பிய பின்னர் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அடிப்படைத் தேவைகள் குறித்தும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டும் என சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

தங்குமிடம், உணவு, குடிநீர், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு சொந்தமான காணிகள் இராணுவம் அல்லது வேறு அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்தால், அந்தக் காணிகளின் நிலைமை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, சட்ட ரீதியாக உரிமை கொண்டவர்களுக்கு அவற்றை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

அதேபோன்று, அவர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டிருந்தாலோ அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலோ, அவற்றை மீள அமைப்பதற்கான வீடமைப்பு மற்றும் மீள்கட்டுமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான உதவிகளும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்புவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக தெளிவான வழிகாட்டல் பத்திரம் ஒன்றை அரசாங்கம் தயாரித்து வழங்க வேண்டும் என்றும் சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியுரிமையை எவ்வாறு உறுதிப்படுத்துவது, எந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், பாதுகாப்பு அனுமதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது, எந்த அரச நிறுவனங்களை அணுக வேண்டும், எவ்வளவு காலத்துக்குள் அந்த நடைமுறைகள் நிறைவு செய்யப்படும், இலங்கைக்கு வந்த பின்னர் எங்கு செல்லவேண்டும் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அந்த வழிகாட்டல் பத்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழிகாட்டல் பத்திரம் இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளிடம் சென்றடையும் பட்சத்தில், அவர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, சாணக்கியன் குறிப்பிடுகின்ற வகையில் செயற்படுவதற்கான இயலுமை அரசாங்கத்திடம் இருப்பதாகவும், அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் பல்வேறு காரணங்களினால் இலங்கையை விட்டு இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்கள், அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்கள் அல்லது துறைமுகங்கள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறாத காரணத்தினால் மீண்டும் இலங்கைக்கு வரும்போது எதிர்கொண்ட சட்ட ரீதியான தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சட்டத்திற்கு அமைவாக இவ்வாறான நபர்கள் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், தற்போதைய அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் அந்தத் தடைகளை நீக்குவதற்கும், புதிய நடைமுறைகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய செயற்படுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு தற்போது முக்கியமான சட்ட ரீதியான தடைகள் நீக்கப்பட்டுள்ளன என்பது அமைச்சரின் பதிலின் மூலம் தெளிவாகியுள்ளதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இலங்கைக்கு மீண்டும் வர விரும்பினால், இந்தியாவில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் அல்லது இந்தியாவின் ஏனைய பகுதிகளில் உள்ள இலங்கைத் தூதரக மற்றும் துணைத் தூதரக அலுவலகங்களை அணுகி, தாங்கள் இலங்கைப் பிரஜைகள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்காக அவர்களிடம் உள்ள குடியுரிமை மற்றும் அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் அரச புலனாய்வு சேவை பிரிவின் ஊடாக தேவையான பாதுகாப்பு அறிக்கை பெறப்பட்டு, அந்த நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் அவர்கள் இலங்கைக்கு திரும்பி வர முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, தற்போதைய நடைமுறையின் கீழ் அவர்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு தடைகள் ஏதும் இல்லை எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எனினும், பாதுகாப்பு அனுமதி தொடர்பான நடைமுறைகள் எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து இந்தியாவில் உள்ள அகதிகளுக்கு தெளிவான தகவல்கள் வழங்கப்படவேண்டியது மிகவும் அவசியம் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அனுமதிக்காக என்னென்ன ஆவணங்கள் தேவை, எந்த நிறுவனங்கள் பரிசீலனை செய்கின்றன, எவ்வளவு காலத்திற்குள் பரிசீலனை நிறைவடையும், பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டால் அதற்கான காரணங்கள் என்ன, அதனை எதிர்த்து மறுபரிசீலனை அல்லது மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளதா உள்ளிட்ட விடயங்களில் வெளிப்படையான வழிகாட்டல் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே பாதுகாப்பு அனுமதி தொடர்பான முழுமையான வழிகாட்டல் பத்திரத்தை அரசாங்கம் தயாரித்து இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு வழங்க வேண்டும் என தாம் வலியுறுத்தியதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரும்பி வரும் அகதிகளின் காணி, வீடமைப்பு, சொத்து, இழப்பீடு, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகளை ஒரே பொறிமுறையின் கீழ் தீர்ப்பதற்காக, 'ஒருங்கிணைந்த மீள் வருகை மற்றும் மறுவாழ்வு அலகு' ஒன்றை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என்றும் அவர் முன்வைத்துள்ளார்.

பல தசாப்தங்களுக்குப் பின்னர் ஒருவர் தமது சொந்த நாட்டுக்கு திரும்பி வரும்போது, குடியுரிமை பிரச்சினைக்கு ஒரு அலுவலகம், காணிப் பிரச்சினைக்கு இன்னொரு அலுவலகம், வீட்டு பிரச்சினைக்கு வேறு நிறுவனம், பாதுகாப்பு அனுமதிக்காக இன்னுமொரு நிறுவனத்தை அணுகவேண்டிய நிலை ஏற்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நாட்டிற்கு திரும்பி வரும் எமது மக்களை அரசாங்கம் வரவேற்று, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவேண்டும் எனவும் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

இது வெறுமனே அகதிகள் மீள் வருகை தொடர்பான விடயம் அல்ல எனவும், பல ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்த எமது குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவது, தமது சொந்த மண்ணில் மீண்டும் வாழ்வது மற்றும் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பான மனிதாபிமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அச்சமின்றி, பாதுகாப்பாகவும் கௌரவத்துடனும் இலங்கைக்கு திரும்பி வந்து வாழக்கூடிய சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் தற்போது தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், புதிய நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள நிலையில், இந்த நடைமுறைகள் வெறுமனே அமைச்சரவைத் தீர்மானமாகவும் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலாகவும் மாத்திரம் இருக்காமல், நடைமுறையில் இந்தியாவில் வாழும் எமது மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள எமது மக்கள் மீண்டும் இலங்கைக்கு வர விரும்பினால், அவர்கள் எவ்வாறு வரவேண்டும், என்ன ஆவணங்களைத் தயாரிக்க வேண்டும், எங்கு விண்ணப்பிக்க வேண்டும், பாதுகாப்பு அனுமதியை எவ்வாறு பெறவேண்டும் என்பன தொடர்பாக தெளிவான தகவல்கள் அவர்களிடம் சென்றடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அவர்கள் இலங்கைக்கு வந்த பின்னர் தங்களுடைய காணி, வீடு, சொத்து மற்றும் வாழ்வாதாரத்தை மீளப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடைமுறை உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், குறிப்பாக பாதுகாப்பு அனுமதி தொடர்பான வழிகாட்டல் பத்திரம் மற்றும் மீள்குடியேற்றத்துக்கான ஒருங்கிணைந்த பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதே தமது முக்கிய வலியுறுத்தலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வாழ்ந்து வரும் எமது மக்கள் தமது சொந்த நாட்டுக்கு மீண்டும் திரும்புவதற்கு அச்சப்படவேண்டிய நிலை இருக்கக்கூடாது எனவும், அவர்கள் இலங்கையின் பிரஜைகள் என்ற அடிப்படையில் தமது நாட்டுக்கு பாதுகாப்பாகவும் கௌரவத்துடனும் திரும்பி வந்து, தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அனைத்து உரிமைகளும் வசதிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.