
ஒருசில வரிகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிவோம். சிறந்த திட்டமிடலுக்கு அமைய திறைசேரியின் கையிறுப்பு ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒருசில வரிகளுக்கு விலக்களிக்க தீர்மானித்துள்ளோம். வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக 1,750 பில்லியன் ரூபாவும், நேரடி மூலதனச் செலவினங்களுக்காக 250 பில்லியனும் சேர்த்து மொத்தமாக 2000 பில்லியன் ரூபாவும் ஒதுக்கியுள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அக்குரஸ்ஸ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக குறிப்பிட்டளவான வரிகளிலிருந்து விலக்களிக்கப்படும். சில வரிகளால் சுமை ஏற்பட்டுள்ளதையும், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் அறிவோம்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி திறைசேரியின் கையிருப்பை ஸ்திரப்படுத்தியுள்ளோம். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், மூலதனச் செலவினங்களுக்காக 1,750 பில்லியன் ரூபாவும், நேரடி மூலதனச் செலவினங்களுக்காக 250 பில்லியனும் சேர்த்து மொத்தமாக 2000 பில்லியன் ரூபாவும் ஒதுக்கியுள்ளோம்.
வீதிகள்,பாலங்கள்,மின்சாரம், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய அனைத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு, இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகளவு மூலதனச் செலவினங்களைச் செய்யும் ஆண்டாக அடுத்த ஆண்டு அமையும்.அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் ஊடாகவே, திறைசேரியின் நிதியை கிராமங்களுக்கு கொண்டு சேர்க்க முடியும்.
வறிய நிலையில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து 'அஸ்வெசும' திட்டத்தின் ஊடாகவும், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் பாடசாலைப் புத்தகங்களை வாங்க முடியாதவர்களுக்குமான நிவாரணங்கள் ஊடாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றோம்.
எதிர்வரும் டிசம்பர் மாதத்தில், அஸ்வெசும பயன்பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கும், 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கும் 6000 ரூபாய் கொடுப்பனவை வழங்கவுள்ளோம். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் எப்போதும் நிவாரணங்களிலேயே தங்கியிருப்பது நல்லதல்ல. ஆனால்,பொருளாதார வளர்ச்சி எவ்வளவுதான் அடைந்தாலும்இ நிவாரணங்களை நம்பி வாழும் ஒரு நலிவுற்ற சமூகப் பிரிவு எப்போதும் இருக்கும்.
சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் இல்லங்களில் வாழும் பெற்றோரையும் பாதுகாப்பாளர்களையும் இழந்த சிறுவர்கள் உள்ளனர். அத்தகைய ஒவ்வொரு சிறுவருக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வங்கிச் சேமிப்புக் கணக்கொன்றில் மாதம் 5000 ரூபாய் வீதம் வைப்பு செய்யப்படும். அவர்களுக்கு 18 வயதாகி வெளியேறினாலும்,21 வயது வரை அந்த 5000 ரூபாய் கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்கப்படும்.
உலக சந்தை விலைக்கு அமைய எதிர்வரும் மாதம் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும். இருப்பினும் நிவாரணம் வழங்கல் ஊடாக விலையேற்றத்தை கட்டுப்படுத்த தீர்மானித்துள்ளோம். எரிபொருள் நிவாரணம் மக்களுக்காகவே வழங்கப்படுகிறது என்றார்.




.jpg)



.jpg)
.jpg)


