ஆசனப் பட்டியால் தவிர்க்கப்பட்ட பாரிய காயங்கள் – அதிவேக வீதி விபத்தில் 8 மாணவர்கள் பாதுகாப்பு


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பல வாகன விபத்தில், ஆசனப் பட்டிகளை அணிந்திருந்தமை பாரிய காயங்களைத் தவிர்க்க உதவியதாக பொலிஸ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் W.P.J. சேனாதீர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சேனாதீர, விபத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் அனைவரும் ஆசனப் பட்டிகளை அணிந்திருந்ததாகத் தெரிவித்தார்.

விபத்தைத் தொடர்ந்து எட்டு மாணவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

மேலும், விபத்தில் சிக்கிய ஏனைய வாகனங்களில் பயணித்தவர்களும் ஆசனப் பட்டிகளை அணிந்திருந்ததால், அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களின் தீவிரம் குறைந்ததாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

காலை 6.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு பேருந்துகள், கெப் வாகனம் மற்றும் பல கார்கள் உட்பட 11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன. விபத்தைத் தொடர்ந்து 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாகப் பயணித்த கெப் வாகனம் திடீரென பிரேக் பயன்படுத்தியபோது வழுக்கிச் சென்று வீதியோர பாதுகாப்புத் தடுப்பில் மோதியதைத் தொடர்ந்து ஆரம்ப விபத்து ஏற்பட்டதாக சேனாதீர தெரிவித்தார்.

மழைக்காலங்களில் வாகன சாரதிகள் வேகத்தைக் குறைத்து பயணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஈரமான வீதிகளில் பிரேக் பயன்படுத்தும்போது வாகனங்கள் வழுக்கிச் செல்லும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி அணியும் விதிமுறைகளை பொலிஸார் கடுமையாக அமுல்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற இந்த விபத்து ஆசனப் பட்டி விதிமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்.