நாமல் ராஜபக்ஷவின் கைது சட்டவிரோதமானது; போதுமான ஆதாரங்கள் இல்லை – உதய கம்மன்பில





ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை “சட்டவிரோதமானதும் அநீதியானதும்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை நாமல் ராஜபக்ஷ பெற்றுக்கொண்டார் என்பதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளனவா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

வர்த்தகர் நிமல் பெரேரா வழங்கியதாகக் கூறப்படும் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கம்மன்பில குறிப்பிட்டார்.

எயார்பஸ் பரிவர்த்தனையுடன் தொடர்புடைய பணம் பிரியங்கா விஜேநாயக்கவிடமிருந்து நிமல் பெரேராவுக்கு மாற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் விசாரணையாளர்களிடம் இருப்பதாகவும், அதன் பின்னர் அப்பணம் நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டதை நிரூபிக்கும் ஆதாரம் என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

வேறு எவரும் இல்லாதபோது நாமல் ராஜபக்ஷவின் மேசையில் 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை வைத்ததாக நிமல் பெரேரா தெரிவித்ததாகக் கூறிய கம்மன்பில, அந்த வாக்குமூலத்தைத் தவிர பணம் நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டதற்கான வேறு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறினார்.

எயார்பஸ்–ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விவகாரத்துடன் தொடர்புடைய பணப்பரிவர்த்தனைகள் பிரித்தானிய நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்கெனவே ஆராயப்பட்டுள்ளன. விமானக் கொள்வனவில் முறைகேடான செல்வாக்கை ஏற்படுத்துவதற்காக வழங்கப்பட்ட இலஞ்சமாகவே அந்தப் பணம் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், நிமல் பெரேரா குறித்த பணத்தை நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கியதாகக் கருதினாலும், அது இலஞ்சப் பணமாக நாமல் ராஜபக்ஷவால் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதை எவ்வாறு நிரூபிக்க முடியும் என்றும் கம்மன்பில கேள்வியெழுப்பினார்.

ஒருவர் பெற்ற பணத்தை மற்றொருவருக்கோ, அமைப்புக்கோ, ஆலயத்திற்கோ, விளையாட்டுக் கழகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ வழங்கக்கூடும். பணத்தின் மூலத்தைப் பற்றிய அறிவோ, ஆரம்பப் பரிவர்த்தனையில் தொடர்போ இருந்ததற்கான ஆதாரமின்றி அதனைப் பெற்றவரை குற்றவாளியாக்க முடியுமா என்றும் அவர் வினவினார்.

நாமல் ராஜபக்ஷவின் கைது அரசியல் நோக்கத்துடனானது எனக் குற்றஞ்சாட்டிய கம்மன்பில, அதனை செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் பேரணியுடன் தொடர்புபடுத்தினார்.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்கவின் அழைப்பை ஏற்று குறித்த பேரணியில் உரையாற்றவுள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.