பஸ் நிலையக் கழிப்பறையில் பிரசவித்த சிசுவைக் கைவிட முயன்ற பெண் கைது!



கரவனெல்ல பொது பஸ் நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிப்பறை நீர்த் தொட்டியில் பிரசவித்த சிசுவைக் கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய குறித்த பெண் செவ்வாய்க்கிழமை (01) நண்பகல் 12 மணியளவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன் தினம் பிரசவித்ததாகக் கருதப்படும் சிசுவைக் கழிப்பறையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையிலேயே, அதனை அவதானித்த பொதுமக்கள் அப் பெண்ணைத் தடுத்து நிறுத்திப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெண்ணும், சிசுவும் உடனடியாகக் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலைத் தகவல்களின்படி, சிசு தற்போது ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.