மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்ட 11 வயதுச் சிறுவன் உயிரிழப்பு




நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை மட்டு. வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய  ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று (03) வியாழக்கிழமை மாலை எடுத்து உட்கொண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனை அடுத்து மயங்கி வீழ்ந்த சிறுவனை உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும், பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெல்லாவெளி பொலஸார் ஈடுபட்டு வருகின்றனர்.