புதிய நெருக்கடிகள் ஏற்படும்போது, கடந்த காலங்களில் ஏற்பட்ட மன உளைச்சல் அனுபவங்கள் மீண்டும் வெளிப்படுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
“இலங்கையில் அனர்த்தங்களுடன் தொடர்புடைய மன உளைச்சல் மற்றும் இழப்புகளை எதிர்கொள்ளுதல்” (Addressing Disaster-Related Trauma and Loss in Sri Lanka) என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், அனர்த்தங்களால் ஏற்படும் உளவியல் தாக்கங்களை தனித்தனி சம்பவங்களாகப் பார்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஏற்படும் நெருக்கடிகள் ஒருவரின் உணர்வுரீதியான மன உளைச்சலை மேலும் அதிகரிப்பதுடன், அதிலிருந்து மீள்வதையும் கடினமாக்கக்கூடும் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
கேரள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிதிலைமாறன் தெய்வேந்திரன் (Mithilaimaran Theivendran) மேற்கொண்ட இந்த ஆய்வில், 2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் வெளியிடப்பட்ட 25 ஆய்வுக் கட்டுரைகள், அரச ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் ஆராயப்பட்டுள்ளன.
இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நெருக்கடிகளுடன் தொடர்புடைய மன உளைச்சல், உயிரிழப்புகள் மற்றும் காயங்களுடன் மாத்திரம் மட்டுப்படவில்லை என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வீடுகள், வாழ்வாதாரங்கள், சமூக உறவுகள், நிதிப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கையில் இருந்த நிலைத்தன்மை உணர்வு போன்றவற்றை இழப்பதும் மக்களிடையே ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போர், இடம்பெயர்வு, அன்புக்குரியவர்களின் இழப்பு அல்லது பொருளாதார நெருக்கடிகளை அனுபவித்தவர்கள், மற்றுமொரு நெருக்கடியை எதிர்கொள்ளும்போது அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.
மேலும், டிட்வா சூறாவளி (Cyclone Ditwa) உள்ளிட்ட அண்மைய அனர்த்தங்கள், கடந்தகால மன உளைச்சல் அனுபவங்களுடன் தொடர்புடைய நினைவுகளையும் உணர்வுரீதியான எதிர்வினைகளையும் மீண்டும் தூண்டக்கூடும் என்பதையும் ஆய்வு எடுத்துக்காட்டியுள்ளது.
ஆய்வுக்காக பரிசீலிக்கப்பட்ட இலக்கியங்கள் மற்றும் அறிக்கைகளில், பதற்றம், மனச்சோர்வு, அச்சம், உணர்வுரீதியான சோர்வு மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை முக்கியமான உளவியல் தாக்கங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நெருக்கடியான சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்காக பலர் குடும்ப ஆதரவு, மத நடைமுறைகள் மற்றும் சமூக வலையமைப்புகளைச் சார்ந்திருப்பதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.
அதேவேளை, சிலர் மற்றவர்களிடமிருந்து விலகியிருத்தல், சமூகத் தனிமை மற்றும் தமது உணர்வுகளைத் தவிர்த்தல் போன்ற முறைகளின் ஊடாக இத்தகைய சூழ்நிலைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனநல உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் இன்னமும் பல சவால்கள் காணப்படுகின்றன.
மனநலப் பிரச்சினைகள் தொடர்பான சமூகக் களங்கம், நிதிச் சிரமங்கள், பயிற்சி பெற்ற நிபுணர்களின் பற்றாக்குறை மற்றும் மனநலச் சேவைகள் அனைத்து பகுதிகளிலும் சமமாகக் கிடைக்காமை போன்றவை முக்கிய தடைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் இந்தத் தடைகள் அதிக சவால்களை ஏற்படுத்துவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே, இலங்கையில் அனர்த்தங்களுக்கு மேற்கொள்ளப்படும் பதில் நடவடிக்கைகள், உடனடியாக ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகள் மற்றும் பொருட்சேதங்களை நிவர்த்தி செய்வதுடன் மாத்திரம் நின்றுவிடக்கூடாது என ஆய்வு வலியுறுத்துகிறது.
மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட மன உளைச்சல்கள் மற்றும் இழப்புகளையும் கருத்திற்கொண்டு, நீண்டகால மனநல மற்றும் உளசமூக ஆதரவுகளை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதும், மக்களின் கலாசாரப் பின்னணிக்கு ஏற்றதுமான ஆதரவு அமைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது.





.jpg)



.jpg)
.jpg)


